வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (11/10/2018)

கடைசி தொடர்பு:13:44 (11/10/2018)

``தயவுசெய்து எண்ணூர் கழிமுகத்தைக் காத்திடுங்கள்!" - தமிழகத்தை எச்சரிக்கும் கேரள மீனவர்கள்

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதியை நேரில் பார்வையிட்டவர் அழுத்தமாகவும், தீர்க்கமாகவும் சொன்ன ஒரே விஷயம், ``எண்ணூரைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடசென்னை மொத்தத்தையும் வெள்ளத்தில் மூழ்கடித்துவிடுவீர்கள்" என்பது மட்டுமே. 

``தயவுசெய்து எண்ணூர் கழிமுகத்தைக் காத்திடுங்கள்!

``கேரளாவின் இரண்டாவது ராணுவம் மீனவர்கள்!"

வெள்ளப்பேரிடரின்போது கேரள மீனவர்கள் செய்த மகத்தான சேவைக்கு அம்மாநில முதலமைச்சர் தனது நன்றியை இப்படிச் சொன்னார். அங்கு மட்டுமல்ல, 2015 சென்னை வெள்ளத்தின்போதும் மீனவப் பெருமக்கள் புரிந்த சேவைகள் மகத்தானவை. ஆனால், இங்கும் சரி கேரளாவிலும் சரி நாம் நமது நன்றிகளை வார்த்தைகளில் சொன்னோம். செயலில் காட்டினோமா?

ஒகி புயல். தமிழகக் கேரளக் கடலோரப் பகுதிகளைச் சூறையாடிச் சென்றது. ``அப்போது எங்களை நாங்களேதான் சரிசெய்துகொண்டோம். அரசாங்கம்கூட எங்களுக்கு உதவ வரவில்லை" என்று வேதனைப்பட்டார் கேரள மீனவர் திரு. டீ. பீட்டர். நேற்று காலை எண்ணூர் கழிமுகப் பகுதி ஆக்கிரமிப்பால் கொசஸ்தலையில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்தான் அவரைச் சந்தித்தேன். அவ்வளவு சேதங்களைச் சந்தித்தவர் சென்னையின் நிலையைப் பார்த்து சற்று ஆடித்தான் போய்விட்டார். எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதியை நேரில் பார்வையிட்டவர் அழுத்தமாகவும், தீர்க்கமாகவும் சொன்ன ஒரே விஷயம், ``எண்ணூரைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடசென்னை மொத்தத்தையும் வெள்ளத்தில் மூழ்கடித்துவிடுவீர்கள்" என்பது மட்டுமே. 

எண்ணூரில் அழிந்துகொண்டிருக்கும் கழிமுகப்பகுதி குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளமும் அதன் தாக்கமும் நம் மனதைவிட்டு அவ்வளவு எளிதில் நீங்கிவிடாது. கழிமுகத்தில் கடல்நீரும் நன்னீரும் மோதித் தளும்பும் நீரலைகளைப்போல் எப்போதுமே நம் மனதில் தளும்பிக் கொண்டேயிருக்கின்றது. அதன் சோக அலைகளே இன்னமும் அடங்காமலிருக்க, தற்போது கேரள மீனவர்களும் சூழலியல் அறிஞர்களும் இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுகிறார்கள். ஆம், அடுத்த பெருவெள்ளம் கொசஸ்தலை ஆற்றில். அதற்கு ஒரு பெருமழை வந்தால் போதும்.

எண்ணூர்

ஏன்?

எத்தனை பெருவெள்ளம் வந்தாலும் அதைக் கொண்டுபோய் கடலோடு சேர்க்கவும், நதி பொங்கினால் அதற்கும் இடமளிக்கவும் கழிமுகப் பகுதியும், வெள்ளநீர் வடிகால் பகுதியும் ஆறுகளுக்கு இருக்கும்வரை எந்தப் பாதிப்புமில்லை. அவையிரண்டும் இல்லாமல் போனால்... கழிமுகமே அடைபட்டுவிட்டால்?

எப்படி?

2015-ம் ஆண்டில் தீவாகிப்போன சென்னையிலிருந்து பல பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம். கற்றுக்கொண்ட பாடத்தை எடுத்துக்கொண்டு தமிழக அரசு செய்ததென்ன?

எண்ணூர் கழிமுகப் பகுதியை மேலும் சீரழித்தது. துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில் ஆற்றையே ஆக்கிரமிக்கத் துடித்தது. ஆற்றின் வெள்ள வடிகால் பகுதிகளைப் பயன்பாட்டு நிலங்களாகவும் தொழிற்சாலைகளாகவும் சாம்பல் குளங்களாகவும் மாற்றியது. வெள்ளத்துக்குப் பிறகிருந்து தற்போதுவரை சுமார் 500 ஏக்கர் எண்ணூர் கழிமுகப் பகுதியின் நீர்நிலங்களை இழந்துள்ளது சென்னை. எப்படி இழந்தது?

இழக்கவில்லை. திருடியுள்ளார்கள். தன் காதலனை அணைத்திடத் துடிப்போடு பாய்ந்துவரும் கொசஸ்தலையின் காதலுக்குப் பாலமாய் விளங்கியது எண்ணூர் கழிமுகப் பகுதி. அதை கொசஸ்தலையிடமிருந்து திருடியுள்ளார்கள்.

எதற்கு?

பொய்யான சர்வே வரைபடத்தைக் காட்டித் தொழிற்சாலை நிலங்களாக மாற்றுவதற்காக. அதன்மூலம் அதிகமான ஏற்றுமதிகளைச் சாத்தியமாக்கத் துறைமுகத்தை விரிவாக்குவதற்காக. சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது எண்ணூர் கழிமுகப் பகுதி. சுமார் 150 ஏக்கர் ஏற்கெனவே தொழிற்பேட்டையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஐந்நூறு ஏக்கர் திருடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்னமும் திருடப்படும்.

விளைவு?

நதிநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து வரும்போது அதை ஆற்றுப்படுத்தும் கழிமுகப் பகுதியில்தானே தேங்கி நிற்கும். அந்தக் கழிமுகப் பகுதியே இல்லையென்றால், அங்கு தேங்குவதற்கும் இடமளிக்காமல் சுவரெழுப்பித் தடுத்துவிட்டால், அவள் பாவம். எங்கே போவாள், அருகே கிடைக்குமிடத்தில் அகதியாகத் தேங்கிவிடுவாள். அருகே அவளுக்குத் தகுந்த இடம் எது, எண்ணூர் மக்கள் குடியிருப்புகள்.

கொசஸ்தலை, அடையாற்றைவிடப் பெரியவள். சராசரியாகவே சுமார் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறாள். அதையும் வெளியேற்ற முடியாமல் போக அதோடு மேலும் அதிகமான தனது வெள்ள நீரையும் சேர்த்து அவள் குடியிருப்புகளுக்குள் திருப்பினால் வடசென்னையே மூழ்கினாலும் ஆச்சர்யமில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் அவளைப் பரிசோதித்த ஆய்வாளர்கள்.

``தொழிற்சாலை வந்ததிலிருந்து பருவமழைக்காலத்தின் அர்த்தமே எங்களுக்கு மாறியுள்ளது. முன்பு பருவமழைக்காலம் என்றாலே மிகுதியான மீன்கள் கிடைக்கும். இப்போழுதோ பருவமழை என்றாலே வெள்ளமும் பேரழிவுமே கிடைக்கிறது. எண்ணூர் முகத்துவாரம் மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல. சென்னையின் பாதுகாப்பு இந்த முகத்துவாரத்தை நம்பியே உள்ளது என்பதைச் சென்னை புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் காட்டுக்குப்பம் மீனவத் தலைவர் திரு.செல்வராஜ்.

குடியிருப்புகள்

இந்தியாவில் சூழலியல் சிக்கல்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் பல இடங்களுக்குச் சென்றவர் ஜகதீஷ் கிருஷ்ணசாமி. பெங்களூரைச் சேர்ந்த நீரியல் வல்லுநர். தான் இதுவரை பார்த்ததிலேயே மோசமான நிலையிலிருப்பது எண்ணூர் கழிமுகப்பகுதிதான் என்கிறார் மனவேதனையுடன். மேலும், ``எண்ணூர் தொழிலுக்கு எவ்வளவு வாய்ப்பளித்துள்ளதோ அத்தனைதூரம் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகியுள்ளது. இந்த அழிவு தொடர்ந்தால் சென்னையை யாராலும் காப்பாற்ற முடியாது. உடனடியாக ஆக்கிரமிக்கப்பட்ட 500  ஏக்கர் நிலங்களும் மீட்கப்பட வேண்டும். இங்கு புதியதாக எந்தவிதமான கட்டுமானப் பணிகளோ புதிய தொழிற்சாலைகளோ விரிவாக்கத் திட்டங்களோ கொண்டுவரக் கூடாதென்று அறிவிக்கவேண்டும்" என்றார்.

நான்கு வருடங்களுக்குள் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட வேண்டிய சாம்பல் கழிவுகள் குளங்களிலேயே மண்டிக்கிடந்து அதனருகே இருக்கும் 30 வீடுகளுக்குள்ளும் அதன் கழிவுநீர் நுழைந்துள்ளது. தொழிற்சாலைகளுக்காகத் திருடப்படும் நீர்நிலங்களால் ஆதரவின்றித் தவிக்கிறாள் கொசஸ்தலை. சாம்பல் குளங்களில் ஏற்படும் உடைப்புகள் அப்பகுதி மக்களைக் கொன்று முகத்துவாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக இன்னும் எத்தனை கொடுமைகளைத்தான் எண்ணூர் அனுபவிக்கவேண்டும்?


டிரெண்டிங் @ விகடன்