வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (11/10/2018)

கடைசி தொடர்பு:13:30 (11/10/2018)

போலீஸ் பாதுகாப்புடன் புஷ்கர விழா! தாமிரபரணியில் பக்தர்கள் புனிதநீராடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தீர்த்தகட்டமான முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில், மஹா புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

புஷ்கர விழாவில் பக்தர்கள் நீராடல்

நெல்லை மாவட்டம், பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இன்று (அக்டோபர் 11-ம் தேதி) புஷ்கர விழா தொடங்கி, வரும் 23-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், திரிசங்கனை, அகோபில்லா, தோணித்துறை, பால்குளம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரங்கணி, ஆத்தூர், ஏரல், இரட்டைத் திருப்பதி, மங்களக்குறிச்சி, வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாயத்தான், சொக்கப்பழக்கரைம், முக்காணி, சேர்ந்தபூமங்கலம் உள்ளிட்ட 29 இடங்களில்  உள்ள படித்துறைகளில் நடைபெறுகிறது.

போலீஸ் பாதுகாப்புடன் புஷ்கர விழா

இந்த 29 படித்துறைகளில், முறப்பநாடு தீர்த்தக்கட்டமும், ஸ்ரீவைகுண்டம் தீர்த்தகட்டமும்,  சிறப்புப் பெற்றதும் முக்கியமானதும் ஆகும். முறப்பநாட்டில் கைலாசநாதர் கோயிலின் முன்பு உள்ள தீர்த்தக்கட்டத்தில், ஸ்ரீதாமிரபரணீஸ்வரம் டிரஸ்ட் மற்றும் ஊர்கமிட்டி இணைந்து இந்தவிழாவினை நடத்து வருகிறது. நவ கைலாய சிவ ஆலயங்களில், முறப்பநாட்டில் கைலாசநாதர் விசாலாட்சி அம்பாள் ஆலயம் உள்ளது. இது, குருவின் ஸ்தலம் ஆகும். இங்குள்ள தாமிரபரணி நதி, கங்கை நதியைப் போல தெற்கு நோக்கிப் பாய்ந்து ஓடுகிறது. இதனால், இதை ‘தட்சிண கங்கை’ எனச் சொல்கிறார்கள்.  இந்த நதியில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புஷ்கர விழா

இதேபோல, ஸ்ரீவைகுண்டம் திருமஞ்சனப் படித்துறையிலும் புஷ்கரவிழா இன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இவ்விழாவை ஓய்வுபெற்ற ஐஜி., மாசானமுத்து தலைமையிலான மகாபுஷ்கர விழாக்குழுவினர், வியாபாரிகள் சங்கத்தினர் மக்கள் நலச்சங்கத்தினர் இணைந்து செய்துவருகிறார்கள். ஸ்ரீவைகுண்டத்தில், நவகைலாயத்தில் ஆறாவது தலமான கைலாசநாதர் சிவகாமி அம்பாள் கோயில் உள்ளது. அத்துடன், நவதிருப்பதிகளான 9 பெருமாள் கோயில்களும் இந்த ஊரைச் சுற்றியே அமைந்துள்ளது சிறப்பானது. ஒரே ஊரில் நவ திருப்பதி தலமும் நவ கைலாயத் தலமும் அமைந்துள்ளது சிறப்பானதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீவைகுண்டத்தை ’பூலோக வைகுண்டம்’ எனவும் சொல்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற முறப்பநாடு மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில், பக்தர்கள் புனித நீராடிவருகின்றனர். இன்று தொடங்கி 13 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் பல்வேறு ஹோமமும், தாமிரபரணி நதியில் பக்தர்கள் புனித நீராடலும், மஹா ஆராத்தியும் நடைபெறுகின்றன. இதேபோல, மற்ற படித்துறைகளிலும் புஷ்கரவிழா தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில், 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க