வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (11/10/2018)

கடைசி தொடர்பு:14:10 (11/10/2018)

கோலாகலமாகத் தொடங்கிய மகாபுஷ்கரம்! - தாமிரபரணியில் புனித நீராடிய ஆளுநர்

தாமிரபரணி நதியில் மகாபுஷ்கரம் விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து நதியில் நீராடினார்.

தாமிரபரணி மகாபுஷ்கரம் விழா

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயரும்போது, அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. குருபகவான் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரையிலும் விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். அதனால் விருச்சிக ராசியைக் கொண்ட தாமிரபரணி நதியில், மகாபுஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 144 வருடங்களுக்குப் பின்னர் இந்த விழா நடப்பதால், மகாபுஷ்கரமாகக் கொண்டாடப்படுகிறது. 

பொதிகை மலையின் உச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி, சமவெளிப் பரப்பில் தலைகாட்டும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் 149 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. இவற்றில், ஜடாயுத் தீர்த்தம் உள்ளிட்ட முக்கியமான தீர்த்தக் கட்டங்களில் சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நீராடுவதற்கு ஏற்ற வகையில் படித்துறைகளைப் பக்தர்களே சீரமைத்துள்ளனர்.

மகாபுஷ்கரம் விழாவையொட்டி, இன்று காலை முதலாகவே தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி நீராடிவருகிறார்கள். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில், காலையில் இருந்தே ஏராளமான துறவிகள் நீராடிவருகின்றனர். காலை 9 மணியளவில் அகில பாரத துறவிகள் மாநாடு தொடங்கியது. இதில், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான துறவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். துறவிகள் மாநாட்டை அகிலானந்த மகரிஷி சுவாமிகள் கொடி ஏற்றித் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, புஷ்கரம் விழா தொடர்பான மலர் வெளியிடப்பட்டது.

ஆளுநர் வருகை

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை ரயில் மார்க்கமாக தென்காசி வந்துசேர்ந்தார். அவரை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்மண்டல ஐஜி., சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து பாபநாசம் சென்ற அவரை துறவியர் சங்கத்தினர் வரவேற்றனர். பின்னர், புஷ்கரம் விழாவை அவர் முறைப்படி தொடங்கி வைத்ததுடன், தாமிரபரணி நதியில் நீராடினார். 

இதற்காக, அவருக்கென தனியாக நீராட இடவசதி செய்யப்பட்டிருந்தது. அங்கு, நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நெல்லை திரும்பும் ஆளுநர், அருகன்குளம் பகுதியில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில், மாலையில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி வரையிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அகில பாரத துறவிகள் சார்பாக அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.