வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (11/10/2018)

கடைசி தொடர்பு:15:42 (11/10/2018)

`ரஞ்சிதா, உன்னை இப்படியா பார்க்க வேண்டும்?' -இரண்டாண்டுகளுக்குப் பிறகு கணவரின் வேதனை

கணவர் தேப்குமாருடன் ரஞ்சிதா

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் சந்தித்துள்ளனர். அப்போது காணாமல் போன மனைவியைப் பார்த்து, `ரஞ்சிதா, உன்னை இப்படியா  நான் பார்க்க வேண்டும்' என்று கணவர் கதறியழுதுள்ளார். 

கடந்த 29.3.2018-ல் சென்னை பனையூரில் செயல்படும் `லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற காப்பகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்யூரிலிருந்து வந்துள்ளது. அதில் பேசியவர், `செய்யூர், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அழுக்கு உடையுடன் பெண் ஒருவர், குப்பைகளோடு குப்பையாக படுத்திருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்போல தெரிகிறார். அவரை மீட்டு உதவி செய்யுங்கள்' என்று தகவல் கூறியுள்ளார். அதன்பேரில் காப்பகத்தின் இயக்குநர் ரிட்டர அய்யப்பன், ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா, சமூக சேவகர் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டீம், செய்யூருக்குச் சென்று அந்தப் பெண்ணை மீட்டு காப்பகத்துக்குக் கொண்டு வந்தனர். அவர் பேசிய மொழி, இவர்களுக்குப் புரியவில்லை. என்றாலும், மருத்துவ உதவிகள் அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டது. சிகிச்சையின் காரணமாக கடந்த மாதம் அவர் யார் என்ற தகவல் தெரியவந்தது. மேலும், அவர் பேசியது பெங்காலி என்றும் தெரிந்தது. உடனே பெங்காலி தெரிந்த நபர் மூலம் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் ரஞ்சிதா மண்டல் என்றும் கணவரின் பெயர் தேப்குமார் மண்டல், கேபேயட்கட்டி, வடக்கு, 24,பர்கானாஸ், கத்திஹாட், மேற்கு வங்கம் எனத் தெரிந்தது. 

தொடர்ந்து ரஞ்சிதா மண்டல் குணமடைந்ததால் அவரை பனையூரில் உள்ள ஷெல்ட்டர் ஹோமில் சேர்த்தனர். தொடர்ந்து ரஞ்சிதா மண்டல் கொடுத்த தகவலின்படி அவரின் குடும்பத்தைத் தேடும் பணியில் சமூக ஆர்வலர் மணிஷ்குமார் என்பவர் ஈடுபட்டார். அவரின் நீண்ட தேடுதலில் ரஞ்சிதா மண்டலின் கணவர் தேப்குமாரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம், 'உங்கள் மனைவி சென்னையில் உள்ள காப்பகத்தில் இருக்கிறார்' என்ற தகவலைத் தெரிவித்ததும் அவர் மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.  தொலைபேசியிலேயே மணிஷ்குமாருக்கும் ரஞ்சிதாவை மீட்க உதவியவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். உடனடியாக மேற்கு வங்கத்திலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு அவரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராம்பிரசாத்தும் வந்தனர். 

 ரஞ்சிதா

பனையூரில் உள்ள காப்பகத்தில் இருந்த ரஞ்சிதா மண்டலை தேப்குமார் பார்த்ததும் கதறி அழுதார். ரஞ்சிதா மண்டலின் கண்களும் குளமாகின. அப்போது, `இப்படியா உன்னைப் பார்க்க வேண்டும்' என்று பெங்காலியில் தேப்குமார் கூறியுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறினார் ரஞ்சிதா மண்டல். இதையடுத்து ரஞ்சிதா மண்டலை மேற்கு வங்கத்துக்கு தேப்குமார், ராம்பிரசாத் ஆகியோர் அழைத்துச் செல்கின்றனர். 

இதுகுறித்து சமூக சேவகரும் அரசு ஊழியருமான வெங்கடேஷ் கூறுகையில், ``செய்யூரில் நாங்கள் ரஞ்சிதா மண்டலை மீட்டபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் யார் என்ற தகவல்கூட  தெரியாமல் இருந்தார். சிகிச்சைக்குப்பிறகுதான் அவர், தன்னுடைய முகவரியை எங்களிடம் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அவருக்குத் தேவையான உதவிகளை காப்பகம் செய்துகொடுத்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். அவரின் குடும்பத்தினருடன் சேர்த்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். 

காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா கூறுகையில், ``ரஞ்சிதா மண்டலுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை பிறந்தபோதுதான் அவருக்கு மனரீதியாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அடிக்கடி வீட்டை விட்டு மாயமாகும் அவர், சில நாள்களுக்குப்பிறகு வீடு திரும்பியுள்ளார். 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியவர், எங்கு சென்றார் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு அவர் செல்லும்போது தங்க கம்மல் அணிந்துள்ளார். வடமாநிலத்திலிருந்து எப்படியோ இங்கு வந்துள்ளார். மார்ச் மாதத்திலிருந்து எங்களின் கவனிப்பில் அவர் இருந்துவருகிறார். குடும்பத்தினருடன் அவரை சேர்த்து வைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், ரஞ்சிதா மண்டலை இனி நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அவரை ரயில் மூலம் மேற்கு வங்கத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். ரஞ்சிதா மண்டலை மீட்டவுடன் அவரை முழுமையாகப் பரிசோதித்தோம். அப்போது அவர் மனதளவில்தான் பாதிக்கப்பட்டிருந்தார். உடலளவில் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது" என்றார். 

தேப்குமாரிடம் பேசியபோது, ``என்னுடைய மனைவி ரஞ்சிதா வீட்டிலிருந்தபோது  குண்டாக இருந்தார். இந்த இரண்டு ஆண்டுகளில் மெலிந்துவிட்டார். அது எனக்கு வருத்தமாக உள்ளது" என்றார்.