வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:17:30 (11/10/2018)

`கலெக்டரே சொல்லிட்டாரு; மரத்த வெட்டி வீசிட்டுப் போயிட்டே இருங்க!' - அதிகாரிகளின் அதிர்ச்சி உரையாடல்

வைகையின் தென்கரையோர மக்கள் தாங்களாக முன்வந்து, பத்தாண்டுகளாக வைகைக் கரையில் மரங்களை வளர்த்து வந்தனர். அண்மையில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் நட்டு வைத்திருந்த மரக்கன்றுகளும் இதில் அடக்கம். இந்நிலையில் திடீரென்று அங்குள்ள மரங்கள் ஆற்றங்கரையை ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி மரங்களை அகற்றக் களமிறங்கியது பொதுப் பணித்துறை. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், அதிகாரிகளிடம் அதைத் தடுத்து, சரியான விளக்கம் கேட்டுப் போராடினர்.

வைகை

சம்பவ இடத்தில் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரி, "எதுவாக இருந்தாலும் நிர்வாகப் பொறியாளரிடம் (EE - Executive Engineer) பேச வேண்டும்" என்று கூறியிருக்கிறார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள், நிர்வாகப் பொறியாளரின் அலுவலக எண்ணுக்கு அவர்களது கைப்பேசியில் தொடர்புகொண்டு, சம்பவ இடத்தில் இருந்த அதிகாரியைப் பேசச் சொல்லியிருக்கின்றனர்.

கைப்பேசி கால் ரிக்கார்டிங்கில் இருந்ததை அறியாமல் அந்தப் பொதுப் பணித்துறை அதிகாரி, தன்போக்கில் நிர்வாகப் பொறியாளரிடம் பேசியபோது, ``கலெக்டரே சொல்லியாச்சு! எவன் தடுத்தாலும் போலீஸை ஏவி, அடிச்சு விரட்டிட்டு மரத்த புடிங்கி எரிஞ்சுட்டு போயிட்டே இரு'' என்று நிர்வாகப் பொறியாளர் தன் கீழதிகாரிக்கு உத்தரவிட்டது தெரியவந்துள்ளது.
 
இந்த உரையாடல் பதிவு, பொது மக்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், ``எது எப்படியும் இருக்கட்டும்ங்க! மரம் வெட்டுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி இருக்கான்னு சரியான விளக்கம்தானே கேட்டோம். அதுக்கு பதில் சொல்லாம அடிச்சு தூக்கி எரிஞ்சுட்டு போயிடுன்னு எப்படி சார் சொல்லலாம்? இதுக்கு கலெக்டர்கிட்டயே அனுமதி இருக்குன்னு அவுங்க பேசியிருக்கிறது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துது. மக்கள் விளக்கம் கேட்டா இப்படித்தான் பண்ணுவாங்களா? மதுரை மாவட்ட ஆட்சியர், நடராஜன் இதற்கு சரியான விளக்கம் தந்தே ஆக வேண்டும் !" என்று கொந்தளிப்பும் ஆதங்கமுமாக, பதிலுக்காகக் காத்திருக்கின்றனர் மதுரை மக்கள்!