வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (11/10/2018)

கடைசி தொடர்பு:17:40 (11/10/2018)

`அலறல் சத்தம் யாருக்கும் கேட்கல!'- பறிபோன 5 உயிர்கள்... அப்பா-அம்மா உடல்களைப் பார்த்து கதறிய சிறுவன்

வால்பாறை விபத்து

வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில் தன்னுடைய அம்மாவையும் அப்பாவையும் பலிகொடுத்த பத்து வயது சிறுவன் உயிர் பிழைத்துக் கதறும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை அருகே உள்ளது குருமலை காட்டுப்பட்டி. மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்திலிருந்து 15 பேர்  மினி லாரியில் கோட்டூர் சந்தைக்குப் புறப்பட்டுள்ளார்கள். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஏதாவது அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் கோட்டூர் சந்தைக்குதான் செல்ல வேண்டும். அப்படி வீட்டுக்குத் தேவையான  அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் சென்ற 15 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி, வால்பாறை சாலையில் உள்ள காடம்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. 

அது ஆளரவற்ற பகுதியென்பதால், லாரிக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடியவர்களின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் அவ்வழியாக யாரும் செல்லாததால் உயிருக்குப் போராடியவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப்பிறகு அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்ல, விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தக் கோர விபத்தில், சன்னாசி, மல்லப்பன் ராமன் மற்றும் வெள்ளையன் அவரின் மனைவி செல்வி உள்ளிட்ட 5 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய வெள்ளையன் - செல்வி தம்பதியின் பத்து வயது மகன் ராஜ்குமார்,  தன் கண்ணே இறந்து கிடந்த அம்மாவையும் அப்பாவைப் பார்த்துக் கதறிய காட்சி பார்ப்பவர்களைக் கண்கலங்க வைத்தது. படுகாயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

விபத்து குறித்து காடம்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் சூழலில்,  'குருமலை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதிக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால், அப்பகுதி மக்கள் வாரம் ஒருமுறை 35 கிலோமீட்டர் நடைபாதையாக நடந்து வந்தோ அல்லது பாதுகாப்பற்ற மினி லாரியில் சென்று தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

அப்படி நேற்று பொருள்களை வாங்கிக்கொண்டு இரவு வீடு திரும்பும்போது நடந்த இந்த விபத்து அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குப் பேருந்து வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்காததால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.