வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (11/10/2018)

`ராஜராஜ சோழனை சொந்தம் கொண்டாடத் தடை விதியுங்கள்!' - தஞ்சை கலெக்டருக்குச் சென்ற மனு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழாவில் `ராஜராஜ சோழன் எங்கள் சாதி' எனப் பல்வேறு சாதிய அமைப்புகள் போஸ்டர் ஒட்டுவதற்கும் பேரணி செல்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழன்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 19 மற்றும் 20-ம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,033 வது சதய விழா கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 20-ம் தேதி கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவிப்பார். இதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் பேரணியாக வந்து மாலை அணிவிப்பார்கள். இந்த நாளில் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு சாதிய அமைப்புகள் ராஜராஜ சோழன் எங்கள் சாதி எனப் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். 

காவல்துறையினர் அனுமதிக்கும் இடத்திலிருந்து பேரணியாக வந்து மாலை அணிவிப்பார்கள். மிகச்சிறந்த ஆட்சி முறை மற்றும் 1,000 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் உலகப் புகழ்பெற்ற பெரிய கோயிலைக் கட்டி உலகத்துக்கே தமிழர்களின் பெருமையைக் கொண்டு சென்ற மாமன்னனைத் தாங்கள் சார்ந்த சாதியைச் சேர்ந்தவராகக் குறிப்பிடுவதைப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரும்பவில்லை. இதற்கு எதிராகக் குரல் கொடுத்தும் வருகின்றனர். இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தியிடம் பேசினோம்.

"ஒவ்வொரு வருடமும் சதய விழாவுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் பொதுமக்கள் வருவார்கள். வெளிநாட்டினர் பலர் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள். தமிழர்களின் பெருமையை உலகறிய செய்த ராஜராஜ சோழனுக்காகக் கொண்டாடப்படுவது சதய விழா. இதில் பல்வேறு சாதி அமைப்புகக்ச் சேர்ந்தவர்கள் மாமன்னன் எங்கள் சாதி எனப் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். சாதி கோஷம் போட்டவாறு அவரது சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். பெரிய அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு பெரும் பதற்றத்தோடு நடந்து முடியும் சதய விழா. இந்த வருடம் அப்படி இல்லாமல் சாதிய சங்கங்கள் ராஜராஜ சோழன் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனப் போஸ்டர் அடித்து ஒட்டுவதற்குத் தடை விதிப்பதோடு வன்முறைகளைத் தூண்டும் வகையில் நடக்கும் சாதிய அமைப்புகளின் பேரணிக்கும் தடை விதிக்க வேண்டும். 

இந்த வருடம் விழாவின் முத்தாய்ப்பாக 60 வருடங்களுக்குப் பிறகு, குஜராத்திலிருந்து ராஜராஜ சோழன் மற்றும் அவரின் பட்டத்து இளவரசியான உலகமாதேவி சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்பட்டு பெருவுடையார் சந்நிதிக்கு எதிரே வைக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணமான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் டீமுக்கு சதய விழாவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என ஆட்சியர் அண்ணாத்துரை மற்றும்  எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளோம். உலகம் போற்றும் வகையில் ராஜராஜ சோழன் சதய விழாவை கொண்டாட வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க