வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:18:20 (11/10/2018)

`பா.ஜ.க ஊழலை வீடுவீடாகச் சொல்லணும்!' - காங்கிரஸாருக்கு மேலிடம் போட்ட உத்தரவு

மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கையும் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும் வீடுதோறும் பிரசாரம் செய்ய வேண்டும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மற்றும் தமிழகப் பொறுப்பாளர் வலியுறுத்தினார்.

                              காங்கிரஸ் நிர்வாகிகள் 

அரியலூரில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தமிழகப் பொறுப்பாளருமான ஸ்ரீகலா பிரசாத் கலந்துகொண்டு வாக்குச்சாவடி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.

                                 கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸார்

 பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகலா பிரசாத், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது தேர்தலுக்கான பிரசாரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து வீடுதோறும் காங்கிரஸ் கட்சியினர் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும்.

                                  ஸ்ரீகலா பிரசாத்

கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள் நாட்டின் பொருளாதார நிலைமை உள்ளிட்டவை குறித்து வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.