வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (11/10/2018)

கடைசி தொடர்பு:18:03 (11/10/2018)

`என் தந்தையின் நிலை யாருக்கும் வரக்கூடாது!'- அடையாறு புற்றுநோய் மையத்துக்கு 40 ஏக்கர் நிலம் வழங்கிய தம்பதி

இன்றைய சூழலில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடம் வாங்கிப் போடுவதென்பது மிகப்பெரிய விஷயம். நிலம் என்று வந்துவிட்டால் ரத்த சொந்தங்களே அடித்துக்கொள்ளும் காலம் இது. ஆனால், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர். 

நிலம்
 

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் 74 வயது கே.வி.சுப்பாராவ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரின் மனைவி பிரமிளா ராணி (65). சுப்பாராவுக்கு கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள  சூரப்பூண்டி கிராமத்தில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி இருக்கலாம். இந்த நிலையில், அந்த நிலத்தை சென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்குத் தானமாக வழங்கியுள்ளார் சுப்பாராவ். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகளும் இன்று முடிந்தன. அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில் டாக்டர் ஏ.வி லக்ஷ்மணன், கும்மிடிப்பூண்டி துணைப் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தின் பத்திரத்தை சுப்பாராவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

நிலத்தை தானமாக கொடுத்தது குறித்து சுப்புராவ் கூறுகையில் `என் தந்தை கிருஷ்ணய்யா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் குறித்து போதிய விழிப்புஉணர்வு இல்லை. சிகிச்சையும் இல்லை. எனவே, என் தந்தையை நான் இழந்தேன்.  மேலும் அந்தக் காலத்தில் புற்றுநோய் அரிதான நோயாக இருந்தது. ஆனால், இப்போதோ புற்றுநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அடையாற்றில் உள்ள புற்றுநோய் மையம் மக்களுக்குச் சிகிச்சையை சேவையாக வழங்கி வருகிறது என்பதை அறிந்து நெகிழ்ந்துபோனேன். என் தந்தை நிலை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது. எனவே, என் நிலத்தை புற்றுநோய் மையத்துக்குத் கொடுக்க முடிவு செய்தேன்’ என்றார். 

Credits : DT Next

நீங்க எப்படி பீல் பண்றீங்க