வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (11/10/2018)

கடைசி தொடர்பு:20:23 (11/10/2018)

இடஒதுக்கீடு போராட்டம்... உதவிப் பேராசிரியர் பணியைத் துறந்த பார்வை மாற்றுத்திறனாளி!

"நான் பொது ஒதுக்கீட்டின் கீழ்தான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். அப்போது, அதை மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு என்று கூறவில்லை. ஆனால், என்னைப் பணிக்கு எடுத்தபிறகு அதை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் கொண்டுவந்தனர். இது தெரிந்தவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். பெரும்பாலான, பல்கலைக்கழகங்களில் இப்படித்தான் கணக்குக் காட்டி வருகின்றனர்."

இடஒதுக்கீடு போராட்டம்... உதவிப் பேராசிரியர் பணியைத் துறந்த பார்வை மாற்றுத்திறனாளி!

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியார் சிலை முன்பு அமைதியாக அமர்ந்து, கடந்த வாரம் ஒரு நபர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். போலீஸாரும், பல்கலைக்கழக நிர்வாகமும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்த நபரின் முகத்தில் துளிகூடப் பதற்றம் இல்லை. லஞ்சப் புகாரில் கைதான துணைவேந்தர் கணபதியால், சமூகப் பணியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்ட வெங்கடேஷன்தான் அந்த நபர். பார்வை மாற்றுத்திறனாளியான வெங்கடேஷனின் அமைதிக்குப் பின்னால், மிகப்பெரிய இடஒதுக்கீடு போராட்டம் இருக்கிறது.

``1995-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின்படி அரசுத் துறைகளில், 3 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்த இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை" என்று கூறி, தனது உதவிப் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்திருக்கிறார் வெங்கடேஷன்.

அவரிடம் பேசினோம், ``பல்கலைக்கழகங்களில், எந்தத் துறையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் வெளிடப்படைத்தன்மை இல்லை. பார்வை மாற்றுத்திறனாளிகள், செவிப்புலன் மாற்றுத்திறனாளிகள், உடல்திறன் மாற்றுத்திறனாளிகள் என்று தனித்தனியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். அதன்படித்தான், இடஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்தத் தகவலின்படி, தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் 90 சதவிகிதம் இடங்கள், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்து, யாராவது அழுத்தம் கொடுத்தாலோ, சட்டப்படி நடவடிக்கைக்குச் சென்றாலோதான் அவர்களுக்குப் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன.

பாரதியார் பல்கலைக்கழகம்

நான் பொது ஒதுக்கீட்டின் கீழ்தான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். அப்போது, அதை மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு என்று கூறவில்லை. ஆனால், என்னைப் பணிக்கு எடுத்தபிறகு அதை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் கொண்டுவந்தனர். இது தெரிந்தவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். பெரும்பாலான, பல்கலைக்கழகங்களில் இப்படித்தான் கணக்குக் காட்டி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளை, அவர்களுக்கான உகந்த பணியில் அமரவைக்க வேண்டும் என்பதுதான் சட்டம். பணியமர்த்தப்படும்போதும், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கவில்லை என்றால், அதை உடனடியாகப் பொது ஒதுக்கீடாக மாற்ற முடியாது. ஆனால், இங்கு விதிகள் கடுமையாக மீறப்படுகின்றன.

`மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு முறை, எந்தப் பல்கலைக்கழகங்களிலும் பின்பற்றப்படுவதில்லை. இதனால், என்னை மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி எடுங்கள்' என்று, துணைவேந்தராக இருந்த கணபதியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதை அவர் காது கொடுத்தே கேட்கவில்லை. ஆனால், நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், `மூன்று மாதச் சம்பளத்தைப் பல்கலைக்கழக விதிகளின்படி வழங்கிவிட்டுச் செல்' என்று  மட்டும் கூறினார். இடஒதுக்கீடு மற்றும் ராஜினாமா தொடர்பாக உயர்கல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆணையம், ஆளுநர் உள்ளிட்டோரிடம் கடிதம் அளித்தேன். எந்தப் பதிலும் வரவில்லை. பின்னர், சில மாதங்கள் கழித்து நான் ராஜினாமா கொடுத்தது தொடர்பாக, பல்கலைக்கழகம் தரப்பில் விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தனர். `விசாரணையை ஆடியோ, வீடியோ எடுத்து அதன் நகலை என்னிடமும் கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தேன். அவர்கள், என்னைச் சம்பந்தமே இல்லாமல் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்டதுடன், ரெக்கார்டு செய்த ஆடியோ, வீடியோ காப்பியையும் வழங்கவில்லை.

பின்னர், என்னை மெடிக்கல் போர்டு முன்பு ஆஜராக வரச்சொல்லிக் கடிதம் வந்தது. ஆனால், அதற்கான காரணங்கள் எதுவுமேஇட ஒதுக்கீடு, வெங்கடேஷன் சொல்லப்படவில்லை. அங்குச் சென்றபிறகுதான், பல்கலைக்கழகத்திலிருந்து என்னை வரவழைத்தது தெரியவந்தது. என்மீது சந்தேகப்பட்டு பல்கலைக்கழகம் தரப்பில் மெடிக்கல் போர்டை அணுகியுள்ளனர். மெடிக்கல் போர்டில் மீண்டும் எனக்கு 100 சதவிகிதம் பார்வை இல்லை என்றுதான் ரிப்போர்ட் கொடுத்தனர். இப்படி, பல்கலைக்கழகம் தரப்பில் எனக்கு ஏராளமான மன உளைச்சல்களைக் கொடுத்தனர். கணபதி கைதுக்குப் பிறகு வந்த துணைவேந்தர் பொறுப்புக் குழு, எனக்கு ரிலீவிங் ஆர்டர் கொடுத்தனர். `இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை, அதற்கு விளக்கம் கேட்டாலும் அளிப்பதில்லை என்று கூறி, என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்று குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பினேன்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் படிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான சாதனங்களுடன் கூடிய ரிசோர்ஸ் சென்டர் அமைக்க, தமிழக அரசு ரூ.50 லட்சம் வழங்கியது. ஆனால், கண் துடைப்புக்காக அது திறக்கப்பட்டதுடன் சரி. கடந்த 5 ஆண்டுகளாக அது இயங்கவே இல்லை. இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டிருந்தால், இந்நேரம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பணியில் சேர்ந்திருப்பார்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில், மேலும் பலர் பணியில் சேர விண்ணப்பித்திருப்பார்கள்" என்று ஆதங்கத்துடன் முடித்தார்.

``அனைத்துப் பணியிடங்களும் சட்டப்படிதான் பின்பற்றப்படுகிறது" என்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் விளக்கமளித்துள்ளனர். இடஒதுக்கீட்டுக்குப் பெயர்பெற்ற தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவர்களை அங்கீகரிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்