வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:19:00 (11/10/2018)

`தாமிரபரணி நதியின் பெருமைகளைப் பாதுகாக்க வேண்டும்’ - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தாமிரபரணி நதியின் பெருமைகளையும் கலாசார உயர்வுகளையும் அடுத்த தலைமுறை அறிந்துகொள்ளும்வகையில் பாதுகாக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

தாமிரபரணி புஷ்கரத்தில் ஆளுநர்

144 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கரம் விழா இந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில் நடக்கிறது. வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மகாபுஷ்கரம் விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாபநாசத்தில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ``144 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். 

தமிழக மக்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுடன் தாமிரபரணி ஆறு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இந்த ஆற்றைப் பற்றி சங்க இலக்கியங்களில் மட்டும் அல்லாமல் பல்வேறு காவியங்களிலும் பாடப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 12 முக்கிய நதிகளுக்கு அதன் ராசிகளுக்கு ஏற்ப புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் காவிரியும் தாமிரபரணியும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளதில் இருந்தே இந்த நதியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். 

சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்தியரால் பெயர் சூட்டப்பட்டது, தாமிரபரணி. இந்தப் புண்ணிய நதியில் நீராடினால் அனைத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். அதனால்தான், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் புஷ்கர விழாவில் பங்கேற்க உள்ளனர். தாமிரபரணி நதியும் முருகப் பெருமானும் வைகாசி விசாக தினத்தையே பிறந்தநாளாகக் கொண்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 

தமிழுக்கு முதன் முதலாக இலக்கணம் எழுதியவர் அகஸ்தியர். அதைத் தொடர்ந்தே அவரது வழியொற்றி அவரது சீடரான தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் வடித்தார். அதனால் தமிழ் மொழி என்பது தாமிரபரணி நதி தோன்றியபோதே தோன்றியிருக்க வேண்டும். பொதிகை மலையின் உச்சியில் சுமார் 1,725 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் இந்த நதி, புன்னக்காயல் என்கிற இடத்தில் மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலையில் 550 அடி உயரத்தில் இருந்து விழும் குற்றாலம் அருவி உள்ளிட்ட ஏராளமான அருவிகளும் நீர் நிலைகளும் தாமிரபரணியை மையமாகக் கொண்டிருக்கின்றன. அவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கின்றன. தாமிரபரணி நதிக்கு, தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய இரு பருவமழைக் காலங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. இந்த நதியைப் பயன்படுத்தி 4,400 சதுர கி.மீ பரப்பளவுக்கு விவசாயம் செய்யப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் தாகம் தீர்க்கப்படுகிறது. 

பன்வாரிலால் புரோஹித்

மகாபுஷ்கரம் என்பது நதியைச் சுத்தப்படுத்துவதற்காக நடத்தப்படும் விழாவாகக் கொள்ளலாம். அதனால் இந்த புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணி ஆற்றின் பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்து நமது வருங்கால சமுதாயத்துக்கு எந்தப் பங்கமும் இல்லாமல் விட்டுச் செல்ல வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார். புஷ்கரம் விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெகுவாகப் புகழ்ந்தார். விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.