வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:19:20 (11/10/2018)

இலங்கையில் அதிக பணம் கிடைக்கும்! - அமோனியம் சல்பேட்டை குறிவைக்கும் கடத்தல் கும்பல்

கோடியக்கரையிலிருந்து இலங்கைக்குக் கடந்தவிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் அமோனியம் சல்பேட் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

கடத்தல் அமோனியம் சல்பேட்

நாகை மாவட்டத்திலுள்ள கோடியக்கரையிலிருந்து அதிவேகப் படகில் அரை மணிநேரத்தில் இலங்கைக்குச் சென்றுவிட முடியும். எனவே, இப்பகுதி கடத்தல் தொழிலுக்கு முக்கியத் தலமாகப் பயன்பட்டுவருகிறது. விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போருக்குப் பின்னர் கொஞ்சம் இடைவெளிவிட்டிருந்த கடத்தல் தொழில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அடிக்கடி கடத்தல் தங்கம் மற்றும் மருந்து பொருள்கள் பிடிபடுவது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் வேதாரண்யம் அருகில் திருத்தலைக்காடு கடற்கரையோரம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெடிபொருள்கள் சிக்கின. இதில் தொடர்புடைய கடத்தல்காரர்களை இதுவரை கண்டறிய முடியவில்லை.

இந்தநிலையில், இன்று கோடியக்கரை கடலோரத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 965 கிலோ அமோனியம் சல்பேட் பிடிபட்டிருக்கிறது. இதுபற்றிப் போலீஸாரிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டில் விவசாயிகள் களைக்கொல்லியாகப் பயன்படுத்தும் அமோனியம் சல்பேட்டை பயன்படுத்துகிறார்கள். இதை இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு உரமாக இடுவதற்கு கடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அமோனியம் கல்பேட்டைப் பிரித்தெடுத்து வெடிபொருளாகப் பயன்படுத்த முடியும். இலங்கையில் இதற்கு மிக அதிகமாகப் பணம் கிடைப்பதால் இதைக் கடத்துவதற்குத் தயார்படுத்தியிருக்கிறார்கள். எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலை வைத்துப் பிடித்திருக்கிறோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்” என்றனர்.