வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (11/10/2018)

கடைசி தொடர்பு:18:30 (11/10/2018)

`தலைப்புச் செய்திகளில் இடம்பெறவே இந்த நடவடிக்கை!’ - அமலாக்கத்துறையை விமர்சிக்கும் கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. 

கார்த்தி

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்குச் சாதகமாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு, விதிமுறைகளை மீறி தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ என இரண்டு விசாரணை அமைப்புகளும் வழக்கு பதிவு செய்திருந்தன. இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. கார்த்தி சிதம்பரத்தின் 1.16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கியதுடன் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கோரி வருகிறது. ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன் அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி அளித்தது. இதற்கிடையே, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

கொடைக்கானல், ஊட்டி, டெல்லி, லண்டன், ஸ்பெயின் ஆகிய இடங்களில் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 54 கோடி ரூபாய் இருக்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அதில், ``அமலாக்கத்துறையின் நடவடிக்கை விநோதமான ஒன்றாக இருக்கிறது. தலைப்புச் செய்திகளில் இடம்பெறவே அமலாக்கத்துறை இது போன்ற சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை எந்த நீதிமன்றத்திலும் நிற்காது. தகுந்த நீதிமன்றத்தில் முறையிடுவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க