வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:20:00 (11/10/2018)

ஆரத்தி எடுத்து கிரீடம் சூட்டி பெண் குழந்தைகளைக் கொண்டாடிய பெற்றோர்! #internationaldayofthegirlchild

‘உலக பெண் குழந்தைகள் தின’த்தை முன்னிட்டு கோவில்பட்டி, பள்ளியைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆரத்தி எடுத்து  மகுடம் சூட்டி மரியாதை அளித்தனர்.

பெண் குழந்தைகள்

பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கவும் அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் ஐ.நா., சபை கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட முடிவின் படி, 2012-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி முதலாவது சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் தேதி சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ``பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்த தினத்தின் மையக் கருத்து. உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்க வேண்டும் என்பதை ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம் அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். தற்போது கல்வி கற்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கல்வி கற்கும் மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

பெண் குழந்தைகள்

பெண் குழந்தைகளின் கல்வி கற்கும் எண்ணிக்கை அதிகரித்ததைப்போல, சமூகத்தில் குழந்தைத் திருமணம், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை ஆகியவையும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. இதுகுறித்து அரசு சார்பில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், இந்த நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்  பெற்றோர்களும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.    

பெண் குழந்தைகள்

உலக பெண்குழந்தைகள் தினமான இன்று (11.09.18), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி துவக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்டம் ஆகியவை சார்பில் ”உலக பெண் குழந்தைகள் தின விழா” நடைபெற்றது. 75-க்கும் மேற்பட்ட இப்பள்ளி மாணவிகளின் கையில் பூர்ணகும்பம் கொடுக்கப்பட்டு ஊர்வலமாக பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

பின்னர், பள்ளியில் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு கிரீடம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ``பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்.  பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்துவேன்.” என பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க