வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (11/10/2018)

கடைசி தொடர்பு:19:18 (11/10/2018)

சிங்காரச் சென்னைக்குக் சிக்கலை ஏற்படுத்தப்போகும் போராட்டம்!

 துப்பரவு   தொழிலாளர்கள்  போராட்டம்

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் சென்னை மாநகரம் குப்பைக் கிடங்காக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் நிரந்த துப்புரவுத் தொழிலாளர்கள் 9,500 பேரும், தற்காலிகத் தொழிலாளர்கள் 8,500 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களை நீக்கிவிட்டுத் தனியார் நிறுவனத்தின் மூலம் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கையைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதைக் கண்டித்து அண்ணா சாலையிலிருந்து கோட்டையை நோக்கிப் பேரணி செங்கொடி (சி.ஐ.டி.யு) சங்கம் சார்பில் நடைபெற்றது.

அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசுகையில், ``சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்ப இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்களுடைய அமைப்பு சார்பில் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், அதை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஹர்மேந்தர் சிங் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், காலவரையற்ற போராட்டத்தை வரும் 16-ம் தேதி முதல் நடத்த உள்ளோம். மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 3 மண்டலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இதில் எஞ்சியுள்ள 12 மண்டலங்களில் தற்போது எட்டு மண்டலங்களுக்குத் தனியாருக்கு ஒப்பந்தம் கோர அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசின் இந்த முடிவு எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் நேரடியாக சுமார் 16,000 தொழிலாளர்களும் அவர்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தனியாருக்குத் தாரை வார்ப்பதை தமிழக அரசு நிறுத்திவிட்டு எங்களுக்குப் பணி உத்தரவாதம் வழங்க வேண்டும்" என்றார்.

சென்னை நாறப் போகிறதா?