வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (11/10/2018)

கடைசி தொடர்பு:20:40 (11/10/2018)

பி.ஏ.சி.எல். மோசடியால் பாதிக்கப்பட்ட 1,13,352 பேருக்குத் தலா ரூ.2,500 திரும்ப அளிப்பு! - செபி நடவடிக்கை

பி.ஏ.சி.எல். நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் 1,13,352 பேருக்கு தலா 2,500 ரூபாய் திருப்பித் தரப்பட்டுள்ளதாக செபி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. 

பி.ஏ.சி.எல்.

பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி எல்லைப் பகுதியில் பால் வியாபாரியான நிர்மல்சிங் பாங்கோ, குறைந்த விலையில் நிலம் மற்றும் ஐந்தாண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித்தரும் இன்ஷூரன்ஸ் என்ற அறிவிப்புகளோடு சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் பி.ஏ.சி.எல். என்ற கிளை நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் இந்த நிறுவனத்தை நம்பி மாதாமாதம் பணத்தைக் கட்டினார்கள். நிறுவனத்தின் உரிமையாளர் பாங்கோ, இரண்டு நிறுவனங்களின் மூலமும் சுமார் 5.5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 49,100 கோடி ரூபாய் வசூலித்தார். இந்தியா முழுவதும் சுமார் 1.83 லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தார். ஆனால், அறிவித்தபடி வீட்டுமனையோ, பணமோ தராமல் அந்த நிறுவனம் மோசடி செய்தது. 

வாடிக்கையாளர்களின் புகார்களையடுத்து அந்த நிறுவனத்தின் நடவடிக்கையை முடக்கியது செபி. அடுத்ததாக, 2016, பிப்ரவரி 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்யும் வேலையில் இறங்கியது. விற்பனையின்மூலம் திரட்டிய தொகையிலிருந்து முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.2,500 ரூபாயைத் திருப்பித்தர செபி முடிவு செய்தது. அதற்காக பி.ஏ.சி.எல். நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடமிருந்து கடந்த 2018, மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப்பத்தைப் பெற்றது. அதன்பிறகு விண்ணப்பங்களைச் சரிபார்த்து, முதலீட்டாளர்களுக்கு 2,500 ரூபாயை திருப்பித்தரும் பணியைத் தொடங்கியது. இதுவரை 1,13,352 முதலீட்டாளர்களுக்கு 2,500 ரூபாய் திருப்பித் தரப்பட்டுள்ளதாக செபி தெரிவிக்கிறது.