வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (11/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (12/10/2018)

குட்டியின் உடலை எடுக்கவந்தவரின் காலை பற்றிக்கொண்ட தாய் நாய்! - 20 நிமிடம் நடந்த பாசப் போராட்டம்

கும்பகோணம் அருகே விபத்தில் இறந்த குட்டி நாயை குப்பை வண்டியில் எடுத்துச் செல்ல முயன்ற ஊழியரை மறித்து தாய் நாய், 20 நிமிடங்களுக்கு மேல் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

கும்பகோணம் அருகில் உள்ளது தாராசுரம். தஞ்சாவூரிலிருந்து வாகனங்கள் வரும் முக்கிய சாலை என்பதால் தாராசுரம் பேருந்து நிலையம் எப்பவுமே பிஸியாகவே இருக்கும். அந்தப் பகுதியில் தன் குட்டிகளோடு சுற்றித் திரிந்த நாய், நேற்று மாலை சாலை ஓரத்தில் தன் குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஒருவர், குட்டியின் மீது மோதியிருக்கிறார். இதில் அந்தக் குட்டி இறந்துவிடுகிறது. இதைப் பார்த்ததும் தவித்துப்போன தாய் நாய், அந்த நபரைக் கொஞ்சம் தூரம் துரத்திக்கொண்டே சென்றது. ஆனால், அவர் நிற்காமல் சென்றுவிடவே, திரும்பி வந்த தாய் நாய்க்குட்டியைப் பார்த்து சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு, நாக்கால் தடவிக்கொடுத்து எழ வைக்க முயற்சி செய்தது. ஆனால், குட்டி எழுந்திருக்கவில்லை என்பதால் சோகத்தில் மூழ்கியதோடு அதன் அருகிலேயே உட்கார்ந்துவிட்டது. 

நாய்

இதையடுத்து அங்கு பேரூராட்சியின் குப்பை அள்ளும் லாரி வந்தது. அதன் டிரைவர் நாய்க்குட்டியின் உடலை எடுக்க வந்தார். ஆனால், தாய் நாய் எடுக்க விடாததால் பெரும் போராட்டத்துக்குப் பிறகு குட்டியின் உடலை எடுத்து குப்பையில் போட்டுவிட்டுக் கிளம்பத் தயாரானார். ஆனால் நாய், டிரைவரை லாரியில் ஏற விடாமல் மறித்து அவர் காலைப் பற்றிக்கொண்டது. குப்பை லாரி கிளம்பிவிட்டால் தன் குட்டியின் உடல் சென்றுவிடும் என்பதை அறிந்தே அந்த நாய், 20 நிமிடங்களுக்கு மேலாக டிரைவரிடம் இப்படி நடந்துகொண்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

லாரி டிரைவர் பெரும் போராட்டத்துக்குப் பிறகு, ஒரு வழியாக லாரியை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அதன் பிறகு குட்டி அடிபட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது அந்தத் தாய் நாய் என்கிறார்கள் இதைப் பார்த்தவர்கள். மேலும், தன் குட்டிக்காகத் தாய் நாய் நடத்திய பாசப் போராட்டம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பெரும் சோகத்திலும் ஆழ்த்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க