வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:22:04 (11/10/2018)

`ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை புறக்கணியுங்கள்!’ - ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வேண்டுகோள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை துாத்துக்குடியில் மக்களிடம் மனுக்களைப் பெற வரும் ஆளுநரை சந்திக்காமல் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தாமிரபரணியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு, அதைத் தொடங்கி வைக்க இன்று நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நாளை துாத்துக்குடியில் துாய்மை பாரத நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார். துாத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் நாளை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆளுநரைச் சந்தித்து மனுக்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், துாத்துக்குடி மக்கள் ஆளுநரின் வருகையைப் புறக்கணிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை துாத்துக்குடியில் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற வருகைதர உள்ளார். மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவர் இங்கு வரவில்லை. வேறு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகிறவர், அதனுடன் சேர்த்து மக்களையும் சந்திக்க உள்ளார். கடந்த மே, 22-ம்  தேதிக்குப் பிறகு, தூத்துக்குடி மிகப்பெரிய பதற்ற நிலைக்கு உள்ளாகி இன்று வரையில், இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. அந்தக் கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதரத்துக்கும் எதிர்காலத்துக்கும் வழி தெரியாத நிலையில், ஆளுநர் இங்கு வருகை தர உள்ளார். இதுவரையில் இந்தப் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் கண்டனமும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை.

இந்நிலையில்,  அவரின் பிரதிநியான ஆளுநர் இங்கு வருகை தர உள்ளார். அதுவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது இடையில் மக்களைச் சந்திக்கிறார். இந்த வருகையை ஸ்டெர்லைட் தொடர்பான பிரச்னையைப் பற்றி பேச, அதைப் புரிந்துகொள்ள, மக்களின் மனதை அறிந்துகொள்ள மனுக்கள் பெற இருப்பதாக நாங்கள் கருதவில்லை. பல்வேறு மனுக்களோடு மிக முக்கியத்துவம்  வாய்ந்த ஸ்டெர்லைட் பிரச்னை பற்றிய மனுக்களையும் கொடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என நாங்கள் கருதுகிறோம். அதனால் நாங்கள் அவரை சந்திக்கப்போவதில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை இங்கிருந்து அகற்றும் வரையில், மக்களின் மனக் கொந்தளிப்பு ஆறப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, மக்கள் அவரை சந்திப்பதை புறக்கணிப்பதே சரியானதாக இருக்கும். ஆளுநர் இந்த ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என நினைத்தால், உடனே சட்டமன்றத்தைக்கூட்டி, சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை துாத்துக்குடியில் மக்களிடம் மனுக்களைப் பெற வரும் ஆளுநரை சந்திக்காமல் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க