வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (11/10/2018)

கடைசி தொடர்பு:21:40 (11/10/2018)

`வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான இயக்கத்துக்கு தி.மு.க துணைபோகிறது!’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

“தமிழகம் வளர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்படும் சில இயங்களுக்கு தி.மு.க துணை போவதாகத் தெரிகிறது” என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம், தாமிரபரணி மஹா புஷ்கரணி விழாவில்  கலந்துகொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் முக்கியத் திட்டங்களை செயல்படுத்தும்போது மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் எனத் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர், மத்திய சுற்றுச்சூழல்துறையிடம் வலியுறுத்தி உள்ளது கண்டனத்துக்கு உரியது எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் வந்துவிடக் கூடாது என்பதிலும் தமிழகம் வளர்ச்சி பெற்றுவிடக் கூடாது என்பதிலும் ஓர் இயக்கம் நடைபெற்று வருகிறது. அது போன்ற இயக்கத்துக்கு தி.மு.க போன்ற கட்சிகள் துணை நிற்பதாகத் தெரிகிறது. இவர்களின் அழுத்தத்தின் அடிப்படையில் மக்கள் மத்தியில் பொய்யான தகவல் கிளப்பப்படுகிறது. இதனால் போராட்டங்களும் நடக்கின்றன.

எனவே, போராட்டங்களில் ஈடுபடும் இது போன்ற மக்கள் கூறும் கருத்துகளை ஒட்டு மொத்த மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு கூட்டத்தின் கருத்தாகவே அமையும். தமிழகம் வளர்ச்சித் திட்டங்களால் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க