வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (11/10/2018)

கடைசி தொடர்பு:21:05 (11/10/2018)

நீராதாரங்களை அதிகப்படுத்தும் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம்! - வறட்சியைச் சமாளிக்க புதிய திட்டம்

சென்னையின் குடிநீர் தேவைக்காக, புறநகரிலுள்ள ரெட்டேரியிலுள்ள ஏரித் தண்ணீரின் தன்மை ஆய்வு செய்யப்பட்டு தேவைப்படும்போது அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். 

கோப்புப்படம்

சென்னையைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கான குடிநீர் தேவையென்பது 830 மில்லியன் லிட்டராக இருந்துவருகிறது. ஆனால், சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தால் ஒருநாளைக்கு 650 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. இந்த 650 மில்லியன் லிட்டரில் சென்னை புறநகரங்களான மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் செயல்படும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு தலா 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்பட்டுவருகிறது. 

முன்னதாக, சென்னைக்கான நீராதாரமாக வீராணம், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் ஆகிய ஏரிகள் இருந்துவருகின்றன. வறட்சிக் காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக, புதிய நீராதாரங்களை அதிகப்படுத்தும் முயற்சியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சென்னையை ஒட்டிய மாவட்டங்களிலுள்ள ரெட்டேரி, மாம்பாக்கம், மணிமங்கலம் ஆகிய ஏரிகளிலிருந்தும், அந்தப் பகுதிகளிலுள்ள கல்குவாரிகளிலிருந்துப் நீரைப் பயன்படுத்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் ஈடுபட்டிருந்தது. அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா என்ற ஆய்வில் ஐ.ஐ.டி மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். மேற்குறிப்பிட்ட ஏரிகளிலிருந்து எவ்வளவு நீரைப் பெற முடியும் என்ற பொதுப்பணித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரி, 'தற்போது ஏரிகளில் சென்னை மக்களுக்குத் தேவையான நீர் உள்ளது. நீர் பற்றாக்குறையாகும்போது புதிய ஏரிகளிலிருந்து தேவையான நீர் எடுத்துக்கொள்ளப்படும். ஏற்கெனவே, போரூர் ஏரியிலிருந்து நீர் எடுப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது ரெட்டேரி நீர் மனிதர்கள் குடிப்பதற்கு உகந்ததாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தேவைப்படும்போது அந்த ரெட்டேரி நீர் பயன்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.