வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (11/10/2018)

கடைசி தொடர்பு:21:05 (11/10/2018)

கபாலீஸ்வரர் கோயிலில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிலைகளை சோதனை செய்து வருகிறார்.

மாணிக்கவேல்

புன்னை வனத்தில் மயில் வடிவில் அம்பிகை சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றார் என்பது கபாலீஸ்வரர் கோயிலின் வரலாறு. அதனால், இந்தக் கோயிலில், அம்பிகை மயில் வடிவில் சிவனை வணங்குவது போன்று புன்னை வனநாதர் சந்நிதி உள்ளது. அதேபோல், சிறிய கற்சிலையும் இருந்தது. இந்நிலையில், 2004-ல் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணி சமயத்தில் புன்னை வன நாதர் சந்நிதியில் மயில்வடிவில் சிவனை வணங்கும் புன்னைவன நாதர் சிலையை, சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி மாற்றியதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சிலை காணாமல் போயிருப்பதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை சிலை குறித்து விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில், கபாலீஸ்வரர் கோயிலில் இன்று (11.10.2018) மாலை முதல், அந்த சிலை குறித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், நாளையும் கோயிலில் சிலை குறித்து விசாரணை நடத்துவார்கள் என்று தெரியவருகிறது.