வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:23:00 (11/10/2018)

`தி.மு.கவினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்!’ - ஸ்டாலின் வேண்டுகோள்

காஞ்சிபுரம் நாகலுத்து தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் - காமாட்சி தம்பதியின் மகன் கார்த்திக். தி.மு.க பிரமுகரான இவரின் மனைவி தமிழ்ச்செல்வி (26), கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னதாக அவர், தான் இறந்த பின்னர் தனது கண்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, அவரது இரு கண்களை குடும்பத்தினர் தானம் அளித்தனர்.

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்

இச்செய்தியை அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``காஞ்சி கழக உடன்பிறப்பு மகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது கண்களை தானம் செய்துவிட்டு மறைவெய்திய செய்தியறிந்து கண் கலங்கினேன்!. இத்தகைய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவே நானும் பதிவு செய்துள்ளேன். கழகத்தினரும் உடல் உறுப்பு தானம் செய்திட வேண்டுமென விரும்புகிறேன்!’’ எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், அத்துடன் தான், கண் தானம் செய்து கையெழுத்திட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.