வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (11/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (11/10/2018)

`சிலைகள் மாற்றப்பட்டத்தில் முகாந்திரம்' - தஞ்சை பெரியகோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு

தஞ்சை பெரியகோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் தன்மை குறித்து தொல்லியல்துறை மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் ராஜராஜ சோழன் சிலை மற்றும் உலகமா தேவி சிலை குஜராத்திலிருந்து மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில், சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சோழர் காலத்து சிலைகள் மீட்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 29-ம் தேதி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பெரியகோயிலில் உள்ள சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது சில சிலைகளில் சமீபகால தமிழ்ப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரத்திலும் ஆய்வு செய்தனர். 

இந்த நிலையில், நேற்று மீண்டும் இந்திய தொல்லியல் துறை தெற்கு மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 15 பேரும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.எஸ்.பி.ராஜாராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும் கோயிலில் உள்ள 41 சிலைகளின் தொன்மைத் தன்மையை ஆய்வு செய்தனர். சிலைகளின் பழைய ஆவணங்களில் உள்ள படி உயரம், எடைகள் ஆகியவற்றை இந்திய தொல்லியல் துறை தெற்கு மண்டல இயக்குநர் நம்பிராஜன் உள்ளிட்டவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து புன்னைநல்லுார் மாரியம்மன் கோயிலில் உள்ள 19 சிலைகளையும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றன. கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர்களிடமும் விசாரணை செய்தனர்.

இதற்கு முன்னதாக கும்பகோணம் அருகே பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோயில் அதைச் சுற்றியுள்ள 73 கிராமங்களில் உள்ள கோயில்களிலிருந்து பழைமையான, ஐம்பொன் சிலைகள், வெங்கலச் சிலைகள் ஆகியவை  பாதுகாப்பு கருதி, பசுபதிஸ்வரர் கோயிலில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து வைத்தனர். கோயில்களின் திருவிழாக்களின்போது சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டு வந்து வைக்கப்படுவது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினர் கணக்கு எடுத்தனர். அதன் பிறகு 6 சிலைகள் மாயமானது. இந்தச் சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் என 10 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டனர்.

பந்தநல்லுாரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது கோயில் சிலைகள் பத்திரமாக உள்ளதா எனவும், அந்தச் சிலைகளைப் பார்வையிட வேண்டும் எனச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பு மையத்திலிருந்த 107 சிலைகளும் பந்தநல்லுார் கோயிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கெனவே இருந்த சிலைகளோடு மொத்தம் 382 சிலைகள் அங்கு வைக்கப்பட்டது. அப்போது பல கிராம மக்கள் சிலைகளைப் பார்வையிட்டு, சிலைகள் மாற்றப்பட்டிருக்கலாம் எனவும், பல ஆண்டுகளாகச் சிலைகளைப் பார்வையிடாததால் சிலைகள் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தொல்லியல் வல்லுநர்களை வரவழைத்து சிலைகள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இந்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குநர் சத்தியபாமா, தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நாகசாமி தலைமையில் 12 வல்லுநர்களும், அவர்களுக்கு உதவி செய்ய 20 தொழில்நுட்ப பணியாளர்களும் வந்து, 191 சிலையையும் நவீன இயந்திரங்கள் உதவியோடு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டமாக தொல்லியல் துறையினர் தெற்கு மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 15 பேரும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும் மீதமுள்ள சிலைகளின் தொன்மைத் தன்மையை ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து பேட்டியளித்த கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன்,``சிலைகள் மாற்றப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதால் தொடர்ந்து ஆய்வு நடைபெறும்" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க