வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:00:00 (12/10/2018)

`உள்ளூர் உறுப்பினர்களைப் புறக்கணிக்கிறதா மக்கள் நீதி மய்யம்?’ - சேலம் சலசலப்பு

மக்கள் நீதி மய்யம்


''மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மூன்று நாள்கள் சுற்றுப் பயணமாக நாளை சேலம் வர இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளைச் சென்னையிலிருந்து வந்திருக்கிற ஒரு டீம் கவனித்து வருகிறது. `உள்ளூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ச்சிக்காக உயிரைப் பணயம் வைத்து வேலை செய்துகொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஓர் அழைப்போ, வாய்மொழியாகக்கூட சொல்லாமல் புறக்கணிக்கிறார்கள். இதனால் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்களிடம் எங்களுக்கு மரியாதை இல்லை'' என்று குமுறுகிறார் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கோட்டை பாபு.

கோட்டை பாபுகோட்டை பாபுவிடம் பேசியபோது, ''நான் அ.தி.மு.க.,வில் சேலம் மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். ஆனாலும் நான் சின்ன வயதில் இருந்து கமலின் தீவிர ரசிகனாகவும் இருந்துள்ளே. அம்மா இறந்த பிறகு கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததும், நான் அ.தி.மு.கவில் இருந்து விலகி கமலல்ஹாசனை சந்தித்து மக்கள் நீதி மய்யத்திற்கு வந்து விட்டேன்.

சேலத்தில் மக்கள் நீதி மய்யத்தின்  உறுப்பினர்களை சேர்ப்பதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதோடு கட்சி வளர்ச்சிக்காகப் பரப்புரைகள் செய்து வருகிறேன். மக்கள் நீதி மய்யத்தில் நான் தீவிரமாக செயல்படுவதைப் பார்த்து காவல்துறையினர் சேலத்திற்கு எப்போதெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிறாரோ அப்போதெல்லாம் என் வீட்டிற்கு போலீஸாரை அனுப்பி என்னை கண்காணிக்கிறார்கள். இல்லையென்றால் என்னைக் காவல்துறையினர் கஸ்டடி எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

இப்படி உயிரைக் கொடுத்து கட்சிக்காக உழைத்து வருகிறேன். என்னுடைய கோட்டை பகுதியிலேயே பொதுக்கூட்டம் போடுகிறார்கள். எனக்கு ஒரு தகவலும் வரவில்லை. என்னைப்போல பழைய நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எந்த ஒரு தகவலும் வராததால் நாங்கள் அனைவரும் விரத்தியில் இருக்கிறோம். தலைவர் கமல்ஹாசன் அவர்கள் எங்களை அரவணைக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர் கபிலன் கூறுகையில், ``இந்த புகார் ஏற்கெனவே வந்தது. அதைப் பொதுச்செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். மாவட்டப் பொறுப்பாளர்களிடமும் சொல்லி இருக்கிறேன்'' என்றார்.