வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:01:00 (12/10/2018)

'பணத்தை பிரித்துக்கொடுங்க; அப்பத்தான் கட்சி வளரும்'- காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசம்!

மாநில நிர்வாகிகளிடம் உள்ள பணத்தை மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்க வேண்டும். அப்போது தான் கட்சி வளரும் இல்லையேல் கேள்விகுறி தான் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தங்களது ஆதங்கத்தைக் கொட்டிதீர்த்துள்ளனர்.

                             

அரியலூரில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத் கலந்துகொண்டு வாக்குச்சாவடி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார், அப்போது பேசிய நிர்வாகிகள் பலர், ``50வருடங்களாகக் கட்சியில் உள்ளோம். ஆனால் அதற்கான பலன் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. நிர்வாகிகள் பலர் பொருளாதார கஷ்டத்தில் உள்ளனர்.

                                              காங்கிரஸ்

கூட்டத்திற்கு வந்து செல்ல கூடப் பொருளாதாரமின்றி உள்ளனர். மாநில நிர்வாகிகள் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள், அதனை, மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்க வேண்டும். ஒரு தொண்டர் 100வாக்குகளைக் கூட பெறுவதற்கான தகுதி உள்ளது. ஆனால் அவரிடம் பொருளாதாரம் இல்லை. மாநில கட்சிகள் கூட்டம் என்றால், ஒரு தொகையை ஒதுக்கிக் கூட்டத்தை சேர்க்கக் கூறுகிறார்கள். ஆனால், தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் அவ்வாறு இல்லை. எனவே கட்சி வளர வேண்டும் என்றால் பொருளாதாரத்தை மாவட்ட அளவில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிதி கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்கள் வரை சென்றால் தான் கட்சியை வலுப்படுத்த முடியும். காங்கிரஸ் கட்சிக்கு கிராமத்தில் ஓட்டு உள்ளது. அதனை வாங்கக்கூடிய சக்தி உங்களிடம் தான் உள்ளது'' என ஆதங்கத்துடன் கூறினர். 

    நிர்வாகிகள்

பின்னர் சிரிவெல்ல பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியபோது.”கடைக்கோடி தொண்டர்களின் ஒவ்வொரு கருத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் தற்போது நடைபெற்று வரும் மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து வீடுகள்தோறும் காங்கிரஸ் கட்சியினர் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.மேலும் நிர்வாகிகளின் கோரிக்கைகள் அனைத்தும் தலைமையிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அனைத்து அணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்