வெளியிடப்பட்ட நேரம்: 04:09 (12/10/2018)

கடைசி தொடர்பு:08:58 (12/10/2018)

ராணுவ வீரர் மரணத்தில் மர்மம்! - சந்தேகத்தை கிளப்பும் உறவினர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், ராணுவ வீரர் எப்படி இறந்தார் எனவும் அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராணுவ வீரர்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கோழிப்போர்விளையைச் சேர்ந்தவர் ஜெகன் (39). 16 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணையும்போது, 15 ஆண்டுகள் பணிபுரிவதாக எழுதிக்கொடுத்தவர். வறுமை காரணமாக பணி நீட்டிப்புப் பெற்று தொடர்ந்து பணியாற்றினார். இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம், தனது 38-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி சுபி 7மாத கர்பிணியாக உள்ளார். இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதியான பத்ரோடியில், கடந்த 8-ம் தேதி தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்து வீரமரணம் அடைந்ததாக உறவினர்களுக்கு தகவல் கூறப்பட்டது.

மரணம்

இதற்கிடையில், பஞ்சாப் பகுதியில் நக்ஸலைட்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் மரணம் அடைந்ததாகவும் தகவல் சொன்னார்கள்.  அவரது உடல், நேற்று  வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அவருடன், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் வந்திருந்தார்கள். மேலும், திருவனந்தபுரம் பெட்டாலியனைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உடலைச் சுமந்து வந்திருந்தனர். ராணுவ வீரர் ஜெகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அவரது இறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இறப்புச் சான்றிதழிலில் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், யார் துப்பாக்கியால் சுட்டார்கள் என்பதுகுறித்து கூறப்படவில்லை. எனவே, ராணுவர் வீரர் ஜெகன் எப்படி இறந்தார் என உறவினர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெகன் மரணம்குறித்து விசாரணை நடந்துவருவதாக மட்டும்  உடன் வந்த ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். பின்னர், ஜெகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. துப்பாக்கித் தோட்டாக்கள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்படாமலே அவரது உடல் அடக்கம்செய்யப்பட்டது.

ராணுவ அதிகாரிகள்


இதுகுறித்து இறந்த ராணுவ வீரரின் உறவினர் வைகுண்ட ராஜன் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், ஜெகன் இறந்திருந்தால், தமிழக அரசு தனியாக நிதி அறிவித்திருக்கும். அவரின் இறுத்திச்சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டிருக்கும். மாவட்ட கலெக்டர், எஸ்.பி.என அதிகாரிகள் வந்திருப்பார்கள். எல்லையில் சண்டை நடக்கும்போது இறந்தால், மத்திய அரசு  தனியாக பெரிய அளவில் நிதி அறிவித்திருக்கும். ஆனால், ஜெகனுக்கு அதுபோன்ற எந்தச் சம்பவங்களும் நடக்கவில்லை. எல்லையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடக்கும். ஜெகனின் உடல் சாதாரண அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இறப்புச்சான்றிதழிலும் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக மட்டும் மொட்டையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, யாருடைய துப்பாக்கித் தோட்டாவால் ஜெகன் மரணம் அடைந்தார் என ராணுவ அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்" என்றார். ராணுவ வீரரின் மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மம், குமரி மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.