வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:08:18 (12/10/2018)

'எங்கள் வாழ்வாதாரம் என்ன ஆவது?' - சி.எம்.டி.ஏ நடவடிக்கைக்கு எதிராகப் பொங்கும் பூ வியாபாரிகள்

சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள பூக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக, சென்னை சில்லறைப் பூ வணிகர்கள் நலச் சங்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை பூக்கடைப் பகுதியில், பிராட்வே பேருந்து நிலையத்துக்கு எதிரிலுள்ள தெருவில் 150-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் அமைந்திருந்தன. உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அந்தப் பூக்கடைகள் அனைத்தையும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நேற்று பூட்டி சீல் வைத்தது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பூக்கடை உரிமையாளர்களும் சென்னை சில்லறை  புஷ்ப வணிகர்கள் நலச் சங்கத்தின் தலைவருமான தன்ராஜிடம் பேசும்போது, 'வர்த்தகச் சட்டத்தின்படி (specific commodity act) சென்னை பிராட்வே பகுதியில் மொத்தமாக பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யக் கூடாது என்று விதி உள்ளது. இந்தப் பொருள்களைச் சில்லறை முறையில் விற்கக் கூடாது என்று விதி இல்லை.

150 கடைகளில் நாங்கள் சில்லறை முறையில்தான் பூக்களை விற்பனை செய்துவருகிறோம். 100 சதுர அடி கடையில் எப்படி மொத்த வியாபாரம் செய்யமுடியும். வர்த்தகச் சட்டத்தைப் பயன்படுத்தி, எங்களை இந்த இடத்திலிருந்து காலி செய்யவைக்க கோயம்பேடு பூக்கடை விற்பனையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். சி.எம்.டி.ஏ-வும் அந்த வழக்கில் இணைந்துகொண்டது. அந்த வழக்கில், பிராட்வே பேருந்து நிலையத்துக்கு எதிரில் எத்தனை கடைகள் மொத்த வியாபரம் பார்க்கின்றன என்று ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்ய சி.எம்.டி.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்துக் கடைகளும் மொத்த விற்பனை செய்வதாகக் கூறி சி.எம்.டி.ஏ அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, கடைகள் அனைத்தும் காலி செய்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி கடைகள் காலி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் சில்லறை வியாபாரம்தான் செய்கிறோம். எனவே, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம். எங்கள் தரப்பு வாதம் முடிந்த நிலையில், அரசுத் தரப்பு வாதம் இன்றைக்கு வருகிறது' என்று தெரிவித்தார். 

சில்லறை புஷ்ப வணிகர்கள் நலச் சங்கத்தின் பொருளாளர் சந்திரசேகர் பேசும்போது, 'கோயம்பேடு மொத்த பூ விற்பனையாளர்கள், எங்கள் தொழிலை நசுக்கப் பார்க்கிறார்கள். கோயம்பேட்டில் அரசு ஒதுக்கியதன் அடிப்படையில் கடைகளை வியாபாரிகள் பயன்படுத்தவில்லை. கோயம்பேட்டில், ஒருவருக்கு ஐந்து கடைகள் வரை உள்ளன. அவர்கள், கடைகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். அரசு அளித்துள்ள 400-க்கும் மேற்பட்ட கடைகளில் 30 சதவிகிதம் மட்டுமே அரசு ஒதுக்கியதன் அடிப்படையில் பயனாளர்கள் பயன்படுத்திவருகிறார்கள். மற்ற கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்கே எங்கள் கடைகள் பூட்டப்பட்டுவிட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே, எங்களுக்கு வியாபாரம் செய்வதற்கு அனுமதியில்லையென்றால், கோயம்பேட்டில் எங்களுக்குக் கடைகள் ஒதுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.