வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (12/10/2018)

கடைசி தொடர்பு:08:08 (12/10/2018)

திருச்சியில் கட்டுப்பாட்டு டவர் மீது உரசிய விமானம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

திருச்சியில் இருந்து துபாய் சென்ற விமானம், திருச்சி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு டவர் மீது உரசிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி

திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் வரை செல்லும் ஏர் இந்தியா விமானம், இன்று அதிகாலை 130 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு டவர் மீது உரசியதால், தொடர்ந்து விமானத்தின் டயர் அங்கிருந்த சுற்றுச்சுவர் மீது மோதி, சுவர் சேதமடைந்தது. 

இருப்பினும், விமானம் புறப்பட்டு நான்கு மணிநேர பயணத்துக்குப் பிறகு, மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.  விமானம் முழுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கிருந்து துபாய் செல்லும் எனவும், ஒருவேளை விமானத்தில் பாதிப்பு இருந்தால், பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் கூறியுள்ளனர். 

விபத்து நடந்ததை அடுத்து, அமைச்சர் வெல்லமண்டி நடராசன் விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வுசெய்தார். பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.