வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (12/10/2018)

கடைசி தொடர்பு:12:35 (12/10/2018)

`அம்மா எந்திரிம்மா'- கதறிய 3 வயது, 2 வயது பெண் குழந்தைகள் 

அம்மா துர்கா, அப்பா வெங்கடேசன்

பூந்தமல்லி குமணன் சாவடியில், இறந்துகிடந்த அம்மாவைப் பார்த்து, `எந்திரிம்மா' என்று இரண்டு பெண் குழந்தைகளும் கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடி தெரு வீதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், வெங்கடேசன். கூலித் தொழிலாளியான இவர், துர்கா என்பவரைக் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். துர்கா, பூந்தமல்லி நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றினார். தற்போது அந்த வேலையை விட்டுவிட்டார்.  இந்த நிலையில், வெங்கடேசனின் வீடு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னலைத் திறந்து பார்த்தபோது,  வெங்கடேசன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய வெங்கடேசனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போதுதான், பெட்டில் துர்கா இறந்துகிடந்ததும் தெரிந்தது. அவரின் சடலத்தையும் போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவன்- மனைவி எப்படி இறந்தார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வெங்கடேசன், சரிவர வேலைக்குச் செல்வதில்லை. மேலும், குடிபழக்கத்துக்கு அடிமையானார். இதனால், அடிக்கடி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சுப்ரியா (3), சிவன்யா (2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று, வெங்கடேசனுக்கும் துர்காவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளை பாட்டி மீராபாய் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளார் வெங்கடேசன். அதன்பிறகும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வெங்கடேசன், துர்காவின் முகத்தில் தலையணையால் அமுக்கிக் கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். அதன்பிறகு வெங்கடேசன் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும், பிரேதப் பரிசோதனையில்தான் துர்கா எப்படி இறந்தார் என்ற முழுவிவரம் தெரியவரும்" என்றனர். 

 குழந்தைகள்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சம்பவம் நடந்த வீட்டில் கிடைத்த தடயங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, 
துர்காவிடம் தகராறில் ஈடுபட்ட வெங்கடேசன், அவரைக் கொலை செய்திருக்க வேண்டும். அதன்பிறகு, கைது நடவடிக்கைக்குப் பயந்து அவர் தற்கொலை செய்திருப்பார் என்று தெரிகிறது" என்றார்.

அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு  வரும் வெங்கடேசன், துர்காவிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக அவரின் வீட்டில் அருகில் குடியிருப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த குடிப் பழக்கமே அவரை இந்த முடிவுக்குத் தள்ளியுள்ளது. ஒரே நேரத்தில் தாயையும் தந்தையையும் இழந்தது இரண்டு குழந்தைகளுக்கும் தெரியவில்லை. சுப்ரியா மட்டும் இறந்துகிடந்த  அம்மாவைப் பார்த்து, `அம்மா எந்திரிம்மா' என்று சொல்லியதைக் கேட்டவர்களின் கண்கள் கலங்கின. அநாதையான இரண்டு பெண் குழந்தைகளும் தாயைத்தேடி கதறிஅழுதது கல் நெஞ்சையும் உருக்கியது. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அம்மா எப்போ வருவாங்க...

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வெங்கடேசன், துர்கா ஆகியோரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் உறவினர்கள் அங்கு காத்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் உறவினர்களிடம், `அம்மா எப்போ வருவாங்க' என்று சுப்ரியாவும் சிவன்யாவும் அடிக்கடி கேட்கின்றனர். அவர்களுக்கு, `இன்னும் சீக்கிரத்தில் வந்துவிடுவா' என்று கலங்கிய கண்களோடு ஆறுதல் சொல்கின்றனர். 

 மனைவியைக் கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்த சம்பவம் குமணன் சாவடி பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.