வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (12/10/2018)

கடைசி தொடர்பு:13:43 (12/10/2018)

மாநில அளவில் டாப் ரேங்க்... ஆனால், முதலாம் ஆண்டில் அதிக அரியர்... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை!

முதலாம் ஆண்டில் அனைவரும் பொதுவாகப் படிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரியர் வைப்பது தெரியவந்துள்ளது.

மாநில அளவில் டாப் ரேங்க்... ஆனால், முதலாம் ஆண்டில் அதிக அரியர்... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை!

பள்ளிப் பாடங்களில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்கின்றனர். இவர்களின்  முதலாம் ஆண்டு தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது அண்ணா பல்கலைக்கழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பொறியியல் கவுன்சலிங்கில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதன்மையாக உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டுமான வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் கல்லூரியில் போட்டிபோட்டுக்கொண்டு சேர்கின்றனர். இவர்கள் பள்ளியில் பெற்ற மதிப்பெண்ணைப் போலவே, பல்கலைக்கழகத் தேர்விலும் பெறுகிறார்களா என்பதை ஆய்வு செய்ததில், முதலாம் ஆண்டில் அனைவரும் பொதுவாகப் படிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரியர் வைப்பது தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் இரண்டாவது செமஸ்டரின் கணிதப் பாடத்தில் 68.62 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலாவது செமஸ்டரில் கணிதப் பாடத்தில் 70.54 சதவிகிதமும், இயற்பியல் பாடத்தில் 76.37 சதவிகிதமும், வேதியியல் பாடத்தில் 88.54 சதவிகித அளவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-16-ம் ஆண்டில் மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதேநேரம், மொத்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கும் Relative Grading System முறையும் கொண்டு வரப்பட்டது. இதனால், முதலாம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 90 சதவிகிதத்துக்கும் கூடுதலாகவே இருந்தது. மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், 2017-18-ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என்பது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாமல் தேர்ச்சி விகிதமும் குறைந்து வருகிறது. 

பேராசிரியர் சீனிவாசலுஇது குறித்து அண்ணா பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி பேராசிரியர் சீனிவாசுலு, ``2016-17 கல்வியாண்டில், வகுப்பு மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி விகிதம் கணக்கிடப்பட்டது. இதனால் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருந்தது. தரத்தை மேம்படுத்தும்வகையில், மீண்டும் குறைந்தபட்ச மதிப்பெண் 50 -ஐ பெற்றால் மட்டுமே தேர்ச்சி என்ற விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம்" என்றார். 

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் விசாரித்தபோது, ``கடந்த ஆண்டு வரை 11 ம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால், இன்ஜினீயரிங் படிப்பில் சேரும் போது கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது குறைவாக இருந்தது. இதனை மாற்றும் வகையில், இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டில் 11 ம் வகுப்பு கணித பாடப் பகுதிகளையும் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்த்திருந்தோம். இதன்மூலம் தேர்ச்சியில் கொஞ்சம் முன்னேற்றமிருந்தது. 

மேலும், பள்ளிக்கல்வித் துறைக்கு, `மாணவர்கள் நேரடியாகப் பதிலளிக்கும் முறையில்லாமல் சிந்தித்து பதிலளிக்கும் வகையிலும் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்' என்று பரிந்துரை செய்திருந்தோம். 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தியதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிதத்தில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், தற்போது பொதுத்தேர்வு நடத்தினாலும், 11-ம் வகுப்பு மதிப்பெண்ணை உயர்கல்விக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவித்திருப்பதால் இனி வரும் காலங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த கவலைகொள்ளவேண்டி இருக்கிறது" என்றனர். 

 பால குருசாமிஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி, ``பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவரின் பள்ளியின் மதிப்பெண்ணை மட்டுமே அதிகளவில் கவனிக்கின்றனர். இனி, கல்லூரியின் தேர்ச்சி விகிதத்தையும், தரத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். தமிழக அரசு, உடனடியாக பொறியியல் கல்லூரியின் பாடத்திட்டத்தினை  ஆய்வு செய்து,  தரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றம் செய்ய வேண்டும்" என்றார். 

பொறியியல் கல்வியின் மோகம் குறைந்துவருவது ஒருபுறம், தரம் தாழ்ந்து வருவது மறுபுறம் என இன்ஜினீயரிங் கல்வி  இக்கட்டான நிலையில் இருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்