வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (12/10/2018)

கடைசி தொடர்பு:14:32 (12/10/2018)

‘ நீ கேட்டா கூலி கொடுத்துடணுமா?' - 68 வயது முதியவருக்கு ஈரோட்டில் நேர்ந்த துயரம்!

விவசாய வேலைக்காக கூலிப் பணத்தை கேட்கச் சென்ற 68 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா, தூரப்பாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் குப்பன். உடல் தளர்ந்துபோய் ஓய்வெடுக்க வேண்டிய 68 வயதிலும், விவசாய நிலங்களில் கூலி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்திவந்திருக்கிறார்.  சமீபத்தில், வீட்டுக்கு அருகில் இருந்த விவசாய நிலம் ஒன்றில் வேலைக்குச் சென்ற குப்பனுக்கு, 20 நாள்கள் ஆகியும் கூலிப் பணத்தைக் கொடுக்காமல் நிலத்தின் உரிமையாளர் இழுத்தடித்து வந்திருக்கிறார். அதையடுத்து, கடந்த 10-ம் தேதி கூலிப் பணத்தைக் கேட்டு நிலத்தின் உரிமையாளரை சந்தித்திருக்கிறார் குப்பன். அவரோ, ‘ நீ கேட்டா நான் கூலி கொடுத்துடணுமா... என்னா தைரியம் இருந்தா நீயெல்லாம் என்னோட வீட்டு வாசப்படி ஏறி வருவ...’ எனக் கத்தியிருக்கிறார்.

கொலை

இதில் கோபமடைந்த குப்பன், ‘ நான் வேலை செஞ்ச காசைக் கொடுக்க உங்களுக்கென்ன கஷ்டம்’ எனப் பதிலுக்கு எகிறியிருக்கிறார். இதில் கோபமடைந்த நிலத்தின் உரிமையாளர், குப்பனை கீழே தள்ளி கடுமையாகத் தாக்கியிருக்கிறார். வயிற்றில் ஏறி மிதித்ததில், எழுந்து நிற்க முடியாமல் சுருண்டு விழுந்திருக்கிறார் குப்பன். இதைப் பார்த்த வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள், குப்பனை அழைத்துச் சென்று அவருடைய வீட்டில் சேர்த்திருக்கின்றனர்.

குப்பன்வீட்டுக்கு வந்த குப்பன், ‘வயிறு வலி தாங்க முடியலை’ எனக் கண்ணீர் விட்டு, மனைவியிடம் நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். நேரம் ஆக ஆக வயிறு பெரிதாக வீங்க ஆரம்பித்திருக்கிறது. அதைப் பார்த்து பதறிப்போன குடும்பத்தினர், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வயிற்றை ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், கடுமையான உள்காயங்கள் இருந்தது தெரிந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று காலை 4.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். குப்பன் இறந்த செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தாரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். ‘68 வயதிலும் அசராமல் வயலில் இறங்கி வேலை பார்த்தவரை, அடித்துக் கொன்றுவிட்டார்களே’ எனக் கதறி அழுதனர்.

குப்பனின் சாவுக்குக் காரணமான நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் முறையிட்டனர். ஆனால், போலீஸாரோ ‘சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவுசெய்யவே, விவகாரம் பெரிதானது. குப்பன், பட்டியலின பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், போலீஸ் பாகுபாடு காட்டுகிறது என குமுறுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்த விவகாரத்தில் சில அமைப்புகளும் களமிறங்கிவிட்டதால், ஈரோடு அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இறந்த குப்பனின் மனைவி வசந்தா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கின்றனர். அப்படியிருந்தும், குப்பன் இறந்ததை அறிந்து அவர் தாங்கமுடியாமல் கதறி அழுதது பார்ப்போரைக் கலங்கடித்தது.