வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (12/10/2018)

கடைசி தொடர்பு:13:12 (12/10/2018)

விஜயகாந்த் வீட்டில் மாடுகள் மாயமானது எப்படி?

விஜயகாந்த் வீடு
 

 தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீட்டில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகள் நள்ளிரவில் திருடப்பட்டுள்ளன. பூந்தமல்லி போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 சென்னை விருகம்பாகத்தில் குடியிருக்கிறார் நடிகரும், தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான விஜயகாந்த். தற்போது இவர் குடியிருக்கும் வீட்டில் இடநெருக்கடி இருப்பதாகக் கருதியதால் பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் அட்கோ நகரில் 1 ஏக்கரில் பங்களா போன்ற வீட்டை விஜயகாந்த் கட்டிவருகிறார். இந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டநிலையில் விஜயகாந்தின் உடல்நலக்குறைவு காரணமாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

 காட்டுப்பாக்கம் அட்கோ நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விஜயகாந்தின் வீட்டில் 3 மாடுகள் வளர்க்கப்பட்டுவருகின்றன. விலை அதிகமான இந்த மாடுகளை கவனிக்க தனியாக ஆள்களை நியமித்துள்ளார் விஜயகாந்த். புதிய வீட்டில் கட்டுமானப் பணிகள் நடப்பதால் எப்போதும் முன் பகுதியில் உள்ள கதவு பூட்டப்பட்டு இருக்கும். வீட்டில் பின்பகுதியில் சிறிய கதவு ஒன்று உள்ளது. சம்பவத்தன்று அந்தக் கதவு வழியாகத்தான் 2 மாடுகள் திருடப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராகப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். 

 விஜயகாந்த்தின் வீட்டில் உள்ள மாடுகள் மாயமானது குறித்து பூந்தமல்லி தே.மு.தி.க. நகரச் செயலாளர் ஸ்ரீராம் என்பவர் பூந்தமல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். முதலில் இந்தப் புகாரை யாருக்கும் தெரியாமல் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மனு ஏற்புச் சான்றிதழைக் கூட போலீஸார் கொடுக்கவில்லை. ஆனால், மாடுகள் மாயமான தகவல் வெளியில் தெரிந்துவிட்டது. இதனால், போலீஸார், மாடுகளைக் கண்டுபிடிக்க முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விஜயகாந்த் வீட்டில் வளர்க்கப்பட்ட மாடுகள் மாயமானது குறித்து கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்திவருகிறோம். 3 மாடுகள் வளர்க்கப்பட்ட இடத்தில் 2 மாடுகள் மட்டுமே மாயமாகியுள்ளன. மாடுகள் திருடப்பட்டிருந்தால் 3 மாடுகளையும் மர்மநபர்கள் கொண்டு சென்றிருப்பார்கள். ஆனால், 2 மாடுகள் மட்டுமே மாயமாகியுள்ளன. எனவே, நள்ளிரவில் மாடுகளே திறந்து கிடந்த கதவு மூலம் வெளியில் சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம். இதனால், அந்தப் பகுதிகளில் மாடுகளைத் தேடிவருகிறோம். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.