வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (12/10/2018)

கடைசி தொடர்பு:14:50 (12/10/2018)

வருடத்துக்கு 100 மணி நேரம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை!

”வீடு, பள்ளி, நகரத்தை மாணவர்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் 2 மணி நேரம் வீதம் வருடத்துக்கு குறைந்தது 100 மணி நேரத்தை தூய்மைப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும்.” என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆளுநர்

தாமிரபரணி மஹா புஷ்கர விழாவில் கலந்துகொள்வதற்காக, நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு வருகைதந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை  தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற 'தூய்மை பாரத இயக்கம்' குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணிக்காக 18 மினி டிப்பர் லாரிகளைக் கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.

தொடர்ந்து, ஸ்மார்ட் கிளாஸ் ரூமை பார்வையிட்ட அவர், பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளின் வகுப்பறையைப் பார்வையிட்டார். தொடர்ந்து, “நம் தேசத் தந்தை மகாத்மா காந்திஜி, இந்தியாவின் சுதந்திரத்திற்காக மட்டும் பாடுபடவில்லை. இந்தியாவை தூய்மையான இந்தியாவாக மாற்றவும் கனவு கண்டார். மாணவர்களாகிய நீங்கள், உங்களது வீடுகள், தெருக்கள், வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றில் குப்பைகளைப் போடக் கூடாது. கண்ணில் பட்ட குப்பைகளை அப்புறப் படுத்த வேண்டும்.  குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வலியுறுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும். கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பைகளைக் கொண்டுசெல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குப்பைகள் இல்லாத தூய்மையான பாரதத்தை உருவாக்க முயல வேண்டும். இதை உங்களது பெற்றோர்களிடம் வலியுறுத்த வேண்டும். தினமும் 2 மணி நேரம் வீதம் ஆண்டுக்கு குறைந்தது 100 மணி நேரமாவது தூய்மைப் பணிக்கு ஒதுக்க வேண்டும். தூய்மையின் அவசியத்தை ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்குச் சொல்ல வேண்டும்.” என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். அதைத் தொடர்ந்து, தூய்மை பாரத இயக்கம் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில், திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் , அரசு சாரா அமைப்புகளிடம்  கோரிக்கை மனுக்களைப் பெற்ற அவர், இன்று மாலை 4.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை  செல்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க