வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (12/10/2018)

கடைசி தொடர்பு:15:50 (12/10/2018)

`குமுளி மலைச்சாலை சீக்கிரமே சரிசெய்யப்படும்!’ - மக்களின் தொடர் புகார்களுக்கு அதிகாரிகள் பதில்

தமிழகத்தையும் கேரள மாநிலத்தையும் இணைக்கும் கொச்சின் − மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குமுளி மலைச்சாலை, இம்மாத இறுதியில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள லோயர்கேம்பில் இருந்து, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த குமுளி வரை சுமார்          6 கிலோ மீட்டர் தூரம் மலைச்சாலை உள்ளது. ஆகஸ்ட் மாத துவக்கத்தில் பெய்த கனமழை காரணமாக, இந்த மலைச்சாலையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சாலையைச் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருகிறது. தமிழக, கேரள மாநிலங்களை இணைக்கும் பிரதான சாலையாக இது விளங்குவதால், இருமாநில வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களை குமுளிக்குக் கொண்டுசெல்ல முடியாததாலும், எல்லையோரம் அமைந்துள்ள ஏலத்தோட்டங்களுக்குத் தொழிலாளர்கள் செல்ல முடியாததாலும், கொதிப்படைந்த பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினர்.

இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், "குமுளி மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிந்துள்ளது. அதைச் சரிசெய்யும் பணியில் இரவு பகல் பாராமல் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இம்மாத இறுதியில் சாலை சரிசெய்யப்பட்டுவிடும்" என உறுதியளித்தனர்.

முன்னதாக, பால் கொண்டுசெல்ல அனுமதி கேட்டு பால் முகவர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்து, சாலையில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், யாரையும் அனுமதிக்க மாட்டோம். இருசக்கர வாகனத்தை மட்டும் அனுமதிக்க கோரிக்கை வைத்தார்கள். அப்படி அனுமதித்தால், வேகமாக நடைபெறும் சீரமைப்புப் பணிகள் தாமதமாகும். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது. இம்மாத இறுதியில் நிச்சயம் சாலை சரிசெய்யப்பட்டுவிடும்" என்றனர்.