வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (12/10/2018)

கடைசி தொடர்பு:16:10 (12/10/2018)

முகாமில் நண்பனை சுட்டுக்கொன்ற தர்மபுரி ராணுவ வீரர் கைது! - குமரி வீரருக்கு காஷ்மீரில் நடந்த துயரம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை அவரது நண்பரான தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுட்டுக் கொலை செய்தது தெரிவந்துள்ளது. ராணுவவீரர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குமரி ராணுவ வீரர் ஜெகன்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த கோழிப்போர்விளையைச் சேர்ந்தவர் ஜெகன் (39). 16 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணையும்போது, 15 ஆண்டுகள் பணிபுரிவதாக எழுதிக்கொடுத்தவர். வறுமை காரணமாக பணி நீட்டிப்புப் பெற்று தொடர்ந்து பணியாற்றினார். இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம், தனது 38-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி சுபி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதியான பத்ரோடியில், கடந்த 8-ம் தேதி தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்து வீரமரணம் அடைந்ததாக உறவினர்களுக்கு தகவல் கூறப்பட்டது. ஆனால், வீர மரணம் அடைந்த வீரருக்கான நடைமுறை எதுவும் ஜெகன் இறுதிச்சடங்கில் கடைப்பிடிக்கவில்லை. இதையடுத்து அவரது மரணத்தில் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஜெகனின் உறவினர் வைகுண்ட ராஜன்இதைத்தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் ராணுவ அதிகாரியிடம் தொலைபேசியில் உறவினர்கள் கேட்டதை தொடர்ந்து சக ராணுவ வீரர் சுட்டதில் ஜெகன் இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராணுவ வீரர் ஜெகனின் உறவினர் வைகுண்ட ராஜன் கூறுகையில், ``ஜெகனின் மரணம் நிகழ்ந்தது குறித்து அவரது உடலை ஒப்படைக்க வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சதீஸ்குமாரிடம் கேட்டோம். அவர் தனக்கு அதுபற்றி விவரமாக தெரியவில்லை என்றார். இதையடுத்து அவரது மேல் அதிகாரி அசோக் நாயக் என்பவரிடம் இன்று தொலைபேசியில் பேசினேன். ஜெகன் பணி முடிந்து ஓய்வில் இருந்தார். அப்போது பணியில் இருந்த தர்மபுரியைச் சேர்ந்த செந்தில் என்ற ராணுவ வீரரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ தர்க்கம் ஏற்பட்டதில் செந்தில் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் வயிற்றில் குண்டு பாய்ந்து ஜெகன் இறந்துவிட்டார். செந்திலை கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம். ஜெகனும், செந்திலும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். சம்பவம் நடந்தபோது ஜெகன் மற்றும் செந்தில் ஆகிய இருவர் மட்டுமே அந்த இடத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்ற முழுவிவரம் விசாரணை முடிவில்தான் தெரியவரும் எனக் கூறினார். இதை ஆரம்பத்திலே கூறினால் உடலை வாங்காமல் பிரச்னை செய்துவிடுவோம் என நினைத்து எங்களிடம் மறைத்துள்ளார்கள்" என்றார்.