வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (12/10/2018)

கடைசி தொடர்பு:16:50 (12/10/2018)

`சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வரலாம்!' - தடையை நீக்கியது வனத்துறை

சுருளி அருவியில் குளிப்பதற்கான தடையை நீக்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டது மாவட்ட வனத்துறை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுருளி அருவி

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது அழகிய சுருளி அருவி. மேற்குத்தொடர்ச்சி மலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாகச் சுருளி அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. கடந்த 4-ம் தேதி விதிக்கப்பட்ட தடையானது நேற்று நீக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது, "மழை அதிகரித்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அருவியில் குளிக்க தடை விதித்தோம். தற்போது நீர்வரத்து சீராகியுள்ளது. எனவே, அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரலாம் என எதிர்பார்க்கிறோம். மேலும், கடந்த முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதுகாப்புக் கம்பிகள் சேதமடைந்தன. அவற்றைச் சரிசெய்திருக்கிறோம்" என்றார். சமீபத்தில் சுருளி அருவியில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.