வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (12/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (12/10/2018)

அமைச்சர் vs கரும்பு விவசாயிகள்! - சர்க்கரை ஆலைத் தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஆளும் கட்சி தன்னிச்சையாக நடத்தி முறைகேடு செய்வதாக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது மீண்டும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தேர்தல் முறைகேடாக நடைபெற்றதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ள சம்பவம், அ.தி.மு.க தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கூட்டுறவுத் தேர்தலுக்கு தடை

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோட்டில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் நிலங்களைக் கொடுத்து உருவாக்கிய இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்போது 33,000 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொகுதியான பாலக்கோட்டில் வரும் இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தன்னிச்சையாகச் செயல்பட்டு, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் தனது மருமகன் ரவிசங்கரை தலைவராக்க சகல முயற்சிகளையும் செய்து வந்தார். 

இறுதி பட்டியல்

ஆனால், இதை விரும்பாத கரும்பு விவசாயிகள், அ.ம.மு.க விவசாய அணி மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் ஒன்றிணைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைத் தேர்தலில் போட்டியிடக் களமிறங்கினார்கள். ஆனால், தேர்தல் அதிகாரி ராமு மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறிவிட்டு, 17 பேர் கொண்ட இயக்குநர்கள் பட்டியல் வெளியிட்டுவிட்டார். இந்த அராஜகப்போக்கை விரும்பாத விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்யாத விவசாயிகள் அல்லாத தொழில் அதிபர்களுக்கெல்லாம் சர்க்கரை ஆலையில் இயக்குநர்களாக்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் மனு செய்து நீதிமன்றத் தடையைப் பெற்றுள்ளனர். இதனால், இன்று நடைபெற இருந்த தலைவர் தேர்தல் நிறுத்திவிட்டனர். மேலும், தேர்தல் அதிகாரிகளைச் சம்பந்தப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளதால் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். 

பாலக்கோடு கரும்பு விவசாயிகளுக்கும், அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் இறுதியில் வெற்றி பெறப்போவது யார் என்ற விவாதம் இரண்டு தரப்பிலும் சூடு பிடித்துள்ளது. அதே சமயம் அமைச்சருக்கு எதிராக வெடித்த பா.ம.க-வும் தி.மு.க-வும் அமைதி காப்பது கட்சித் தொண்டர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.