வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (12/10/2018)

கடைசி தொடர்பு:16:07 (12/10/2018)

முகாந்திரமிருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதியலாம்! சி.பி.ஐ-க்கு 3 மாதம் கெடு விதித்தது உயர் நீதிமன்றம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க தொடர்ந்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

``4,800 கோடி மதிப்புள்ள ஐந்து நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அத்துறையின் அமைச்சரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது சம்பந்தி சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததுடன் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார்" எனக் குற்றம்சாட்டி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்சஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்தார். ஆனால், அந்தப் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். ஆனால்,  ``தமிழக அரசினால் விடப்பட்ட டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனுத் தாக்கல் செய்தது. இதற்கிடையே, முதல்வர் மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறி ஆர்.எஸ்.பாரதி புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்தது. 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், ஒரு வாரத்துக்குள் டெண்டர் தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஆணை பிறப்பித்தார். மேலும், ஆரம்பகட்ட விசாரணையை 3 மாதத்தில் முடிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட்ட அவர், ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கலாம் எனவும் கூறினார். ஏற்கெனவே, தி.மு.க தொடுத்த குட்கா வழக்கில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.கவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் தலைவலியாக மாறிவிடுமோ என்ற அச்சம் அ.தி.மு.கவினர் மத்தியில் நிலவி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க