வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:17:00 (12/10/2018)

`உண்மை சொல்லப்பட வேண்டும்' - #metoo குறித்து கனிமொழி

`முகமூடிக்குப் பின் ஒளிந்திருக்கும் முகங்களை அடையாளம் காட்டும் பெண்களை நாம் ஆதரிப்போம்' என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்களை மீ டூ (Metoo) என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில், ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் குறித்துப் பதிவு செய்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் மீ டூ ஹேஷ்டேக் பாலிவுட்டிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரபல நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக நானா படேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக திரைத்துறையில் பாடகி சின்மயி மூலம்  ‘மீ டூ’ விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியுள்ளது. 

இந்தநிலையில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “ #metoo பிரசாரம் இன்னும் பல விவாதங்களைக் காண வேண்டும். உண்மை இந்த உலகுக்குச் சொல்லப்பட வேண்டும். இந்த முயற்சி பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். முகமூடிக்குப் பின் ஒளிந்திருக்கும் முகங்களை அடையாளம் காட்டும் பெண்களை நாம் ஆதரிப்போம். பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை அல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.