வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (12/10/2018)

கடைசி தொடர்பு:17:48 (12/10/2018)

`நிலத்துக்கு 2 மடங்கு வேண்டாம்; நீதிமன்ற இழப்பீடு வழங்கணும்!' - கொந்தளிக்கும் 13 கிராம மக்கள்

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பைவிட இரண்டு மடங்கு இழப்பீடு தரப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்த 13 கிராம மக்கள், நீதிமன்ற தீர்ப்பின்படி இழப்பீடு வழங்குங்கள் என்று முறையிட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேலூர், புதுகச்சாவடி, ஜெயங்கொண்டம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களிலிருந்து விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்காக ஜெயங்கொண்டத்தில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தது 13 லட்சம் வழங்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, திட்டத்துக்காக நிலம் கொடுத்த மேலூர் கிராம மக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்குச் சந்தை மதிப்பைவிட இரண்டு மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைத்து விவசாயிகளும் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதித்தர மாவட்ட நிர்வாகம் கூறியது. இதைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளும் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுத்தனர். அப்போது எங்களுக்குச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தொகையை வழங்க வேண்டும். மேலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, கிராமத்துக்கு அருகிலேயே குடியமர்த்த வேண்டும், இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.