வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (12/10/2018)

கடைசி தொடர்பு:17:23 (12/10/2018)

புவியியல் பாடம் என்றாலே சங்கர்தான் - பகிரும் சிங்கப்பூர் நண்பர் 

 சங்கர்

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியை நடத்திய சங்கர், புவியியல் பாடத்தில் அவரிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கமளிப்பார் என்று அவருடன் பழகியதை நம்மிடம் சிங்கப்பூரில் பணியாற்றும் ரவி பகிர்ந்தார். 

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியை நடத்தி வந்த சங்கர், இன்று அதிகாலை சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சங்கரின் ஜூனியரான ரவியிடம் பேசினோம். 

 ``எனக்கு சீனியர் சங்கர் அண்ணன். அவர், ஆதம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டரில் படித்தபோது நானும் அங்கு படித்தேன்.  எனக்கு சீனியரான அவர் என்னிடமும் நண்பரைப்போல பழகினார். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூ வரை சென்றவர் சங்கர். இதனால் அவர் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தார். ஆதம்பாக்கத்தில்தான் தங்கியிருந்தார். எந்த நேரம் சென்று சந்தேகங்களைக் கேட்டாலும் கோபப்படாமல் விளக்கமளிப்பார். என்னைக்கூட ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாக்க அவர் அதிக முயற்சி எடுத்தார். அன்றைக்கு உள்ள என்னுடைய சூழ்நிலை காரணமாக நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவில்லை. அதே நேரத்தில் அவர் கொடுத்த அறிவுரைகள் மற்றும் அன்று நான் கற்றுக்கொண்டதுதான், சிங்கப்பூரில் வங்கித்துறையில் என்னை திறம்பட செயல்பட உறுதுணையாக இருக்கிறது. 

மேலும், நண்பர்களுடன்தான் அதிக நேரத்தை சங்கர் அண்ணன் செலவழிப்பார். உதவி என்று யார் கேட்டாலும் தன்னால் முடிந்ததைச் செய்து கொடுப்பார். அன்றைய காலகட்டத்தில் சிவில் கோச்சிங் பெற வேண்டும் என்றால் டெல்லிக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. அதை மாற்றியவர் சங்கர் அண்ணன்தான். டெல்லிக்குப் போட்டியாக அவரின் ஐ.ஏ.எஸ் அகாடமி மாறியது. அதற்கு அவரின் உழைப்பும் விடாமுயற்சியும்தான் முக்கிய காரணம். 

நண்பர்களுடன் சேர்ந்துதான் அகாடமியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு தனியொருவனாக இந்த அகாடமியைத் திறம்பட நடத்திவந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதை என்னால் நம்ப முடியவில்லை. புவியியலில் அவருக்கு நிகர் அவர்தான். அதுதொடர்பாகப் பல தகவல்கள் அவரிடம் கொட்டிக்கிடந்தன. அதைப் புத்தகமாகவும் எழுதியுள்ளார். அந்தப் பாடத்தில் எந்தக் கேள்விகளைக் கேட்டாலும் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கமளிப்பார். சிவில் கோச்சிங் பெற பாடப் புத்தகங்களை நன்றாகப் படித்தாலே போதும் என்று அடிக்கடி கூறுவார்" என்றார் கண்ணீருடன்.