'நில அபகரிப்பு: பிரதீப் யாதவ், ஜாங்கிட் மீது விசாரணை!' | jangid, land case, court, tamilnadu Government, collector prathip yathavu

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (18/04/2013)

கடைசி தொடர்பு:16:03 (18/04/2013)

'நில அபகரிப்பு: பிரதீப் யாதவ், ஜாங்கிட் மீது விசாரணை!'

சென்னை: சென்னை புறநகர் முன்னாள் போலீஸ் ஆணையர் ஜாங்கிட் மற்றும் முன்னாள் காஞ்சிபுரம் கலெக்டர் பிரதீப் யாதவ் மீது நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், வடநிமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர், கிராம மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாங்கிட் மற்றும் பிரதீப் யாதவிற்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'வட நிமிலியில் கிராமத்திற்கு சொந்தமான பொது இடம் ஒன்பது ஏக்கரை ஜாங்கிட்டும், பிரதீப் யாதவும் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து வளைத்துக் கொண்டார்கள். இதனால் கிராம மக்கள் பொதுப்பாதையை பயன்படுத்த முடியாமலும், பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அந்த மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார் சொக்கலிங்கம்.

ஏற்கெனவே இந்த மனு, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இன்று மீண்டும் இந்த வ‌ழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி, 'சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக  பட்டா உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து விட்டோம். எனினும், அதிகாரிகள் மீது புகார் கூறப்படுவதால் அவர்கள் மீது முறைப்படி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட அரசு முடிவு செய்துள்ளது" என்று கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "விசாரணை நடத்த வேண்டும் என்பது தான் மனுதாரரின் கோரிக்கையும் என்பதால் இந்த மனு இத்தோடு பைசல் செய்யப்படுகிறது" என்றார்.

ஜாங்கிட், பிரதீப் யாதவ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்திருக்கும் விவகாரம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-ஜோ.ஸ்டாலின்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்