வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (12/10/2018)

கடைசி தொடர்பு:18:33 (12/10/2018)

``அமைச்சரவைக்குத் தெரிந்திருக்காமல், அண்ணாமலைப் பல்கலையில் ஊழல் நடந்திருக்காது!"

``அமைச்சரவைக்குத் தெரிந்திருக்காமல், அண்ணாமலைப் பல்கலையில் ஊழல் நடந்திருக்காது!

``அமைச்சரவையின் துணையில்லாமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மெகா ஊழல் நடந்திருக்காது" என்கிற குற்றச்சாட்டு தற்போது மீண்டும் எழுந்திருக்கிறது.  

``அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணம் மிகுதியாக உள்ளது'' என அந்தக் கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 2013-ம் ஆண்டு அரசு ஏற்றுக்கொண்ட பின்பும், அதன் மருத்துவக் கல்விக் கட்டணமானது 5,54,000 ஆக உள்ளது. இந்தக் கட்டணம் பல தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் தொகையைவிட அதிகமாக உள்ளது. அதற்கான வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூலை 13-ம் தேதி வெளியானது. அதில், புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் பல்கலைக்கழகம், புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யாது, பழையக் கல்வி கட்டணத்தையே அமலில் வைத்திருக்கிறது" என்கின்றனர், மாணவர்கள். 

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், 'உடனடியாகக் கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்; அரசுத் தணிக்கையர் தலைமையில் பல்கலைக்கழகத்தின் மொத்த சொத்துகளையும் கணக்கெடுப்பு செய்ய வேண்டும்; 2013-ம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த மாணவர்களுக்கு அரசுக் கட்டணம்போக மீதித்தொகையைத் திரும்பத் தர வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்களின் பெற்றோர்கள் முன்வைத்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பின்னர் செய்தியாளர்கள் பேசிய சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ``'பழைய கல்விக் கட்டண முறை தவறு' என நீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதே கட்டணத்தையே வசூலித்துவருகிறது. `கட்டண நிர்ணயக் குழுவில் கல்லூரியின் நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் பங்குபெறக் கூடாது' என ஒரு விதி இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டண நிர்ணயக் குழுவில் கல்லூரி நிர்வாகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் பங்குபெற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் சொத்துகளைக் கணக்கிட அரசுத் தணிக்கையரைவைத்துக் கணக்கிடாமல், தனியார் கணக்கியரை வைத்துக் கணக்கீடு செய்கின்றனர். அவர்கள், `பல்கலைக்கழகம் நஷ்டத்தில் இயங்குவதால்தான் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது' எனக் காரணம் கூறியுள்ளனர். தமிழக அரசானது 2013-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சொத்துகளை அரசுடைமையாக்கிய பின்னர், ஆண்டுதோறும் 300 கோடி ரூபாய் வழங்கிவருகிறது. 

கல்லூரியை அரசு எடுத்திருக்கும் இந்த நிலையில், அந்தப் பல்கலையில் நஷ்டம் வருவதால்தான் கட்டணம் உயர்ந்திருக்கிறது என்று சொல்வது எப்படிச் சரியானதாக இருக்கும்? ஆனால், அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக்கு வெறும் 13,600 ரூபாய்தான் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவப் படிப்புக்கு 5,54,000 ரூபாயும், பல் மருத்துவப் படிப்புக்கு 3,50,000 ரூபாயும், முதுகலை மருத்துவப் படிப்புக்கு 9,50,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கல்வி நிலையத்தில் நடக்கும் முறைகேடுகள் பற்றித் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சகமும், தமிழக உயர்கல்வித் துறையைச் சேர்ந்தவர்களும் குரல் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இதன் காரணமாக, இந்த விஷயத்தில் அவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பார்களோ என்ற ஐயம் எழுகிறது. இதுகுறித்த விசாரணையை சி.பி.ஐ-க்குக் கொடுக்க வேண்டும். ஏனெனில், காவல் துறை மத்திய அரசின்கீழ் இருந்து செயல்பட்டுவருவதால், அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, கவனமான நடைமுறைகளைக் கையாள வேண்டும். இந்தக் கட்டண உயர்வு என்பது கல்வித் துறையில் ஒரு பொருளாதாரத் தீண்டாமையை ஏற்படுத்தும்" என்றார் மிகத் தெளிவாக. 

சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் காமராஜ், ``சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை, கடந்த 2016-ம் ஆண்டு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர். அந்த வழக்கின் தீர்ப்பானது, ஜூலை 13-ம் தேதி வெளியானது. அதில், `ஆகஸ்ட் 31-க்குள் கட்டண நிர்ணயக் குழுவை அமைத்து, கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்' என்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகமோ, `மூன்று வாரம் கால அவகாசம் வேண்டும்' எனக் கேட்டு நீதிமன்றத்தை நாடியது. அதை மறுத்த நீதிமன்றம், `செப்டம்பர் 15-க்குள் கட்டண நிர்ணயத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. அதனால் கல்லூரி நிர்வாகம், போதுமான ஆய்வுகளைச் செய்யாமல் அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்தக் கட்டண உயர்வு கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக இதற்கான தீர்வை நோக்கி அரசு நிர்வாகம் நகர வேண்டும். அப்போதுதான் படிக்கும் மாணவர்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும்" என்றார், மிக அழுத்தமாக. 

மாணவர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா?


டிரெண்டிங் @ விகடன்