வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (12/10/2018)

கடைசி தொடர்பு:18:20 (12/10/2018)

`எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தாரு; இப்படியொரு முடிவு எடுத்துட்டாரு! - சங்கரை நினைத்து கலங்கும் சற்குணம்

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் இன்று அதிகாலை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய இழப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சினிமா மீது அவருக்குள் அவ்வளவு ஆர்வமாம். தனக்கும் சங்கருக்குமான அறிமுகம், நட்பு பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் சற்குணம்.

சங்கர் IAS அகாடமி

``சங்கரை எனக்கு ரொம்ப வருடமா தெரியும். அப்போ நான் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் பத்தி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் எனக்கு சங்கர் பழக்கமானார். அந்தக் கதை பண்ணும்போது டிஸ்கஷன்ல இருந்தார். சினிமா மேல் அவருக்கு அவ்வளவு ஆர்வம். ஏதாவது சீன் இருந்தால் சொல்லுங்கன்னு சொல்லிட்டு இருப்பார். அப்படி அவர் நடிச்சதுதான் 'சண்டிவீரன்' படத்துல போலீஸ் கேரக்டர்ல வர்ற காட்சி. அவர் அருமையா மிமிக்ரி பண்ணுவார். ஐ.ஏ.எஸ் இன்டர்வியூலேயே 'எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸ் என்ன பண்ணுவீங்க'னு கேட்டிருக்காங்க. அங்கேயும் மிமிக்ரி பண்ணிட்டு வந்ததா எங்ககிட்ட சொல்வார்.

நான் எனக்குத் தெரிஞ்சவங்களை அவர் அகாடமியில சேர்த்து விட்டிருக்கேன். வசதி இல்லைனு அவர்கிட்ட சொன்னா, 101 ரூபாய் மட்டும் கொடுங்க போதும்னு சொல்லுவார். அப்படி 101 ரூபாய் மட்டும் கொடுத்துட்டு ஐ.ஏ.எஸ் ஆனவர்கள் பல பேர். ரொம்ப ஜாலியான நபர். ஸ்டூடன்ட்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோர்கிட்டேயும் ஒரே மாதிரிதான் நடந்துக்குவார். நிலவியல் (Geology) சொல்லிக்கொடுக்கிறதுல 'கில்லி' சங்கர். அவங்க அப்பாவுக்கு இறுதிச் சடங்கு பண்ணகூட பணம் இல்லாத நிலையில ரொம்ப வறுமையில இருந்திருக்கார். அப்படி இருந்த மனுஷன் இந்தளவு முன்னேறி பல அதிகாரிகளை உருவாக்கியிருக்கார்னா அது எவ்ளோ பெரிய சாதனை. அவருடைய உடலைப் பார்க்க அவர்கிட்ட படிச்ச அத்தனை மாணவர்களும் வந்திருந்தாங்க. எனக்கு 'ரமணா' படத்துல க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்த்த மாதிரி இருந்தது. எங்க எல்லோருக்கும் அவ்வளவு நம்பிக்கை கொடுப்பார். ஆனா, அவர் இப்போ இப்படி ஒரு முடிவு எடுத்துட்டார்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமாவும் அதிர்ச்சியாகவும் இருக்கு" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க