வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (12/10/2018)

கடைசி தொடர்பு:19:31 (12/10/2018)

`தீபாவளிக்கு வர வேண்டியவர்; இப்படி ஆயிடிச்சே!’ சவுதியில் இறந்தவருக்காக 10 நாளாகப் போராடும் குடும்பம்

ஜெயபிரகாஷ், சவுதியில் பலியான இளைஞர்

வுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்டுக்குக் கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த 2-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் லால்குடியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் சித்தார்த்தன் என்ற இளைஞர் பலியானார். அவர் இறந்து 10 நாள்கள் ஆகியும் இன்னும் அவரது உடல் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை. 

இதுகுறித்து ஜெயபிரகாஷ் சித்தார்த்தனின் உறவினர் மனோஜ் என்பவரிடம் பேசியபோது, "அவர் என்னுடைய மாமா. எங்க அக்காவும் அவரும் காதலிச்சு திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. எங்க மாமா திருமணத்துக்கு முன்னாடியே சவுதியில் இன்ஜினீயரா வேலை செஞ்சிட்டு இருந்ததால எங்க அக்காவும் அவர் கூடவே சவுதிக்குப் போயிட்டாங்க. கடந்த எட்டு வருஷமா ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு அங்கேயே சந்தோஷமா இருந்தாங்க.

இளைஞர் குடும்பம்

பசங்களுக்கு லீவு விட்டதால அக்காவும் பிள்ளைகளும் இங்க வந்துட்டாங்க. மாமாவுக்கு லீவு கிடைக்காததால அவரால் வர முடியலை. இந்தத் தீபாவளிக்கு அவர் வர வேண்டியது. ஆனால், அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. கடந்த 2-ம் தேதி மாமா வேலை செஞ்சுட்டு இருந்த ப்ளான்ட்ல கேஸ் லீக் ஆகி, தீ விபத்து ஏற்பட்டிருக்கு. அதுல மாமா இறந்துட்டாருன்னு அடுத்தநாள் சொன்னாங்க.

திருச்சி கலெக்டர் ஆபீஸில், மாமா உடலை சீக்கிரம் இந்தியா கொண்டு வரணும்னு மனு கொடுத்தோம். அடுத்தநாள் விசாரிச்சப்போ, 'டெல்லிக்கு மனுவை அனுப்பி வச்சாச்சு. இனி அவங்க பார்த்துக்குவாங்க'ன்னு சொன்னாங்க. மீண்டும் கேட்டபோது, 'போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க. அதெல்லாம் முடிஞ்சாதான் இந்தியா கொண்டு வர முடியும். இன்னும் சில நாள் ஆகும்'னு சொன்னாங்க. பிறகு, எந்தத் தகவலும் இல்லை. எங்க மாமா இறந்து 10 நாள் ஆகுது. அக்காவும் குழந்தைகளும் அழுதுட்டே இருக்காங்க. அவர் உடலை எவ்வளவு சீக்கிரம் இந்தியா கொண்டு வர முடியுமோ, கொண்டு வரணும். காலதாமதம் பண்ணாம சீக்கிரமே இதைச் செஞ்சு கொடுக்கணும்னு தமிழக அரசை வேண்டி கேட்டுக்கிறோம்' என்கிறார் மனோஜ்.