வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (12/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (12/10/2018)

``மீண்டும் திருவண்ணாமலை கல்லூரியில் சேர அனுமதியுங்கள்'' - பாலியல் புகார் தெரிவித்த மாணவி கோரிக்கை!

திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில், உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவி, தன்னை மீண்டும் அதே கல்லூரியில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவி

 

திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் உள்ள விடுதி காப்பாளரும் உதவிப் பேராசிரியருமான தங்கபாண்டியன் மீது அக்கல்லூரியில் பி.எஸ்ஸி மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி கிரிஜா என்பவர் பாலியல் புகார் தெரிவித்தார். சென்னை பெருங்குடியைச் சேர்ந்த மாணவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் நீதிபதி் மகிழேந்தி கல்லூரியில் நேரடியாக விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, உதவி பேராசிரியர் தங்கபாண்டியனை சஸ்பெண்டு செய்தும், விடுதி காப்பாளர்கள் புனிதா, மைதிலி ஆகியோரை வேறு கல்லூரிகளுக்கு  மாற்றியும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி உத்திரவிட்டார்.

மேலும், கல்லூரி மாணவி கிரிஜாவை திருச்சி வேளாண்மைக் கல்லூரிக்கு மாற்றியும் ராமசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், மாணவி திருச்சி வேளாண்மைக் கல்லூரியில் சேராத நிலையில், கிரிஜாவை கடந்த 3-ம் தேதி டிஸ்மிஸ் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தன்னை மீண்டும் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவி கிரிஜா இன்று கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு மனு அளிக்க வந்தார். அவருடன் இந்திய மாணவர் சங்கத்தினரும் மனு அளிக்க வந்தனர். மாணவியுடன், இந்திய மாணவர் சங்கத்தினர் வந்திருப்பதால் அவர்களைச் சந்தித்துப் பேச பேராசிரியர்கள் முன் வரவில்லை. இதனால், துணைவேந்தரைச் சந்திக்க பாதிக்கப்பட்ட மாணவியும் இந்திய மாணவர் சங்கத்தினரும் துணை வேந்தர் அறை முன்பாகக் காத்திருந்தனர். இதையடுத்து, துணைவேந்தர் மாணவியை மட்டும் தனியாக அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து, மாணவி துணைவேந்தர் அறை முன்பாக மாணவர் அமைப்பினருடன் இணைந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், மாணவியையும், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பனையும் துணைவேந்தர் ராமசாமியிடம் காவல் துறையினர் மீண்டும் அழைத்துச் சென்றனர். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் காவல் துறை, நீதிமன்ற விசாரணை அறிக்கை வந்த பிறகு, கமிட்டியில் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததால்  உடன்பாடு ஏற்பட்டது.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி, "பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிட்டி ஆசிரியர்களையும் குழந்தைகளையும் தனித் தனியாக வைக்க அறிவுறுத்தியுள்ளனர்.

யார் மீது தவறு இருந்தாலும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும். காவல்துறை, நீதித்துறை  விசாரணை தனித்தனியாக நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை வந்த பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, வேளாண் பல்கலைக்கழகம் எடுத்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. திருச்சி கல்லூரியில் மாணவியை  உடனடியாக சேரச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறோம். மாணவி வழக்கு விசாரணைக்குச் செல்லும் நாள்களில் வருகைப் பதிவு போடப்படும். அதனால் பாதிப்பு ஏற்படாது. ஆசிரியர்களும் மாணவியும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பேசி வருகின்றனர்" என்றார்.