வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (12/10/2018)

கடைசி தொடர்பு:21:40 (12/10/2018)

``நான் சொல்வது உண்மை; அது வைரமுத்துவுக்கே தெரியும்'' - பாடகி சின்மயி!

வைரமுத்து மீது போலீஸில் புகார் அளிப்பது தொடர்பாக வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளதாகப் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். 

சின்மயி

ஹாலிவுட், பாலிவுட்டை கதிகலங்க வைத்த #MeToo புயல் கோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. Me Too ஹேஸ்டேக் மூலமாகக் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் பிரபல பாடகி சின்மயி. இந்தப் புகார்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்த விவகாரத்தில் பலர் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு இன்று ஃபேஸ்புக் நேரலை மூலம் நீண்ட விளக்கமளித்திருந்தார் சின்மயி. இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சின்மயி. அப்போது பேசிய அவர், ``மீ டூ இயக்கம் இப்போது உலகளாவிய இயக்கமா மாறிகிட்டு வருது. வைரமுத்து மீது புகார் கொடுக்க அப்போது துணிச்சல் இல்லை, இப்போது எனக்குப் பயம் இல்லை. முன்பு பாலியல் குற்றச்சாட்டுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது உள்ள சமூகம் அதைச் சீரியஸாக அணுகுகிறது. பல்வேறு உண்மைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. பல முன்னணி நடிகர்கள் ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆண்களுக்கும் இதே கொடுமை நடக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்தக் கொடுமை நடக்கிறது. எனது குற்றச்சாட்டை வைரமுத்து மறுக்கவில்லை. என் கூட இருக்கிற பாடகர்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை. 

தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியிருக்கிறேன். நான் நல்ல பாடகிதான். அது எனக்குத் தெரியும். பப்ளிசிட்டி தேட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு யாரும் பாட வாய்ப்புக் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. எனக்கு இருக்கும் குரலை வைத்து எப்படியோ பிழைத்துக்கொள்வேன். ஏனெனில், என் பக்கம் உண்மை இருக்கிறது. எனக்கு எவ்விதமான கவலையும் இல்லை. நான் உண்மையைத்தான் சொல்கிறேன். அது வைரமுத்துவுக்கே தெரியும். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம் என்பதால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும். வைரமுத்து மீது போலீஸில் புகார் அளிப்பது தொடர்பாக வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுப்பேன்" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க