வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (12/10/2018)

கடைசி தொடர்பு:22:40 (12/10/2018)

சென்னைப் பல்கலைக்கழகத்தை ஆள்வது யார்? -சந்தேகம் கிளப்பும் மாணவர்கள்..!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவரும், செயற்பாட்டாளருமான உமர் காலித் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வுக்கு இறுதி நேரத்தில் அனுமதி மறுத்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்கூட்டியே அனுமதி கொடுக்கப்பட்ட நிகழ்வுக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் யாருடைய அழுத்தத்தினால் அனுமதி மறுத்தது எனவும் மாணவர்கள் கேள்வியெழுப்பினர். 

மாணவர்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமூக ஜனநாயகத்துக்கான மாணவர்கள் என்கிற பெயரில் இயங்கிவரும் மாணவர்கள் `இந்திய உயர்கல்வியும் ஜனநாயகமும்' என்கிற தலைப்பில் நாளை ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் உமர் காலித் கலந்துகொண்டு பேச இருந்தார். இந்த நிலையில், நிகழ்வுக்கு ஒரு தினத்துக்கு முன்பாக கொடுக்கப்பட்ட அனுமதி மறுக்கப்படுவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். 

இதுபற்றிய பேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர், ``இதே சென்னைப் பல்கலைக்கழகத்தின் மெரினா கேம்பஸில் உள்ள பவள விழா அரங்கத்தில் நிகழ்வை நடத்துவதற்காக வளாக இயக்குநர் பேராசிரியர் சம்பத்திடம் முறைப்படி கடிதம் கொடுத்து அனுமதி பெற்று நிகழ்வுக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து வந்தோம். இந்த நிலையில், திடீரென பல்கலைக்கழக பதிவாளரின் அறிவுறுத்தலின்படி நிகழ்வுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேராசிரியர் சம்பத்திடம் கேட்டபோது பதிவாளரிடம் பேசுமாறு கூறினார். 

பதிவாளரிடம் முறைப்படி பேச சென்றபோது முதலில் பார்க்க மறுத்தார். பின்னர் மாணவர்களைச் சந்தித்த பதிவாளர், சரியான விளக்கம் தரவில்லை. `முன்னர் கொடுத்த அனுமதியைப் பேராசிரியர் சம்பத் தெரியாமல் கொடுத்து விட்டார். இதற்கெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது' எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதன் பின்னணியில் வலதுசாரி மாணவ அமைப்புகளின் நெருக்கடி இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது” என்றார்.

நிர்வாகத்தினர் அனுமதி மறுத்ததும் மாணவர்கள் அதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, `பல்கலைக்கழக ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்', `கல்வி நிறுவனங்கள் காவிமயமாவதைத் தடுப்போம்', `சென்னைப் பல்கலைக்கழகத்தை ஆள்வது யார்?' உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். போராட்டத்தின்போது பேசிய மாணவர் ஒருவர், ``முதலில் முறைப்படி அனுமதி வழங்கிய நிர்வாகம் பின்னர் அதை நிராகரிப்பதற்கான தேவை இருக்காது. தெரியாமல் அனுமதி வழங்கிவிட்டோம் என இப்போது சப்பைக் காரணம் கூறுகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மீறி வலதுசாரி அமைப்புகளின் அழுத்தம் காரணமாக தான் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான சுதந்திரம் இல்லாமலே போய்விடும்” என்றார். 

போராட்டம்

இதுபற்றி கருத்து தெரிவித்த உமர் காலித், இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாணவர்களுக்குச் சரியான காரணம் சொல்லப்படவில்லை. இப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் பேச இருந்த நிகழ்வைத் தடைசெய்துள்ளது. இதுபோன்று நிகழ்வுகளைத் தடை செய்வதன் மூலம் மாணவர்களுடைய உற்சாகத்தைத் தடை செய்ய முடியும் என அவர்கள் தவறாக நினைத்திருக்கின்றனர். இந்தச் செய்தி பரவுவதன் மூலம் இதுபோன்ற போராட்டங்கள் நாளடைவில் தீவிரம்தான் அடையுமே தவிர குறையாது. அரசியலமைப்பைக் காப்பதற்கும் பல்கலைக்கழக ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் தொடரும். பல்கலைக்கழகத்தில் அனுமதி மறுத்தால் தெருவில் இறங்கிப் பேசுவோம்" என்றார்.