வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:23:00 (12/10/2018)

தேனியில் குட்கா பொருள்கள் பறிமுதல் -பூந்தி ராஜனிடம் விசாரணை!

சமீப காலமாக தேனி மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் பிடிபடுவது வாடிக்கையாகியுள்ளது.

தேனி மாவட்டத்தின் நகரின் முக்கிய வர்த்தக வீதியான கடற்கரை நாடார் தெருவில் உள்ள கடை ஒன்றில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று காலை அதிரடி சோதனை நடத்திய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான்மசலாப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய உணவுப்பாதுகாப்புத்துறையின் மாவட்ட அலுவலர் சுகுணா, ``குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து சோதனை நடத்தினோம். அதில், 125 கிலோ எடையுள்ள குட்கா, பான்மசாலா உட்பட ஐந்து வகையான போதைப்பொருள்கள் சிக்கின. இதன் மொத்த மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். அந்தக் கடையின் உரிமையாளர் பூந்தி ராஜன் என்பவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனைக்காக அனுப்பியுள்ளோம்" என்றார். 

நேற்று ஆண்டிபட்டி அருகே உள்ள வேலப்பர் கோயில் பிரிவில், வனத்துறை சோதனைச்சாவடியில் வாகன சோதனை ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று தேனி நகரில் குட்கா பொருள்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.