வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:01:00 (13/10/2018)

``நேர்மையான அரசின் மீது தி.மு.க வீண் பழி போடுகிறது'' - பொன்னையன் குற்றச்சாட்டு!

டெண்டர் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

பொன்னையன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பொன்னையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினர் இன்பதுரை கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொன்னையன், ``நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பாக முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுக்கப்பட்ட புகாரை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி தான் தி.மு.க மனு அளித்தது. லஞ்ச ஒழிப்பு துறை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த நிலையில், வழக்கை நீதிமன்றம்  தற்போது சி.பி.ஐ க்கு மாற்றி உள்ளது.  இந்த சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து  மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.  தி.மு.க ஆட்சியில் 2010 ம் ஆண்டில், அவுட்டர் ரிங் சாலைப் போடும் போது, 1 கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய்  கொடுத்துள்ளனர். தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி ரூபாய் என்ற அளவில் தான் டெண்டர் கொடுக்கப்படுகிறது.

அதிமுக

 

பல்வேறு நெடுஞ்சாலை திட்ட ஒப்பந்த பணிகளில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்த புள்ளிகளை விட,  மாநில அரசின் ஒப்பந்தப்புள்ளிகள் குறைவாகவே உள்ளது. அதற்காகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீது தி.மு.க வழக்கு தொடருமா? நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களிலும் முறைகேடு என்பது வடிகட்டிய பொய். ஒட்டன்சத்திரம் - தாராபுரம் டெண்டரை பொருத்த வரை அது உலக வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றி 10 கோடி செலவில் போடப்பட்டுள்ளது. தி.மு.க 2009ம் ஆண்டில் வண்டலூர் - நெமிலிஞ்சேரிக்கு இடையே போடப்பட்ட சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய் கொடுத்து உள்ளது. மத்திய அரசு,  உறவினர்கள் முறை என வகுக்கப்பட்ட வரைமுறைகளுக்குள் முதல்வரின் உறவினர்கள் வரவில்லை. தற்போது டெண்டர் வழங்கிய இதே நிறுவனத்திற்கு 10க்கும் மேற்பட்ட டெண்டர்கள் தி.மு.க ஆட்சியிலும் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.கவின் பொய் மூட்டைகளை அவிழ்க்கவே மேல்முறையீடு செல்கிறோம். நேர்மையாக நடந்து வரும் அரசு மீது  தி.மு.க வீண் பழி சுமத்தி வருகிறது. தி.மு.க செய்த ஊழல் குறித்த ஆதாரம் எங்களிடம்  உள்ளது. நாங்கள் வழக்குத் தொடுத்து சட்ட ரீதியாக அணுகுவோம்'' என்றார்.